கண்ணெதிரே தனது குட்டியை கொன்றுவிட்டு விரையும் காரைத் துரத்திச் சென்று குற்றவாளியை அடையாளம் காணமுடியாமல் தவிக்கிறது, ஜான்சி என்கிற நாய். உதவி கேட்டுக் காவல் நிலையம் வரும் அதைத் துரத்தியடிக்கிறார்கள். பின்னர், தர்ம ராஜ் (எஸ்.ஏ.சந்திரசேகரன்) என்கிற வழக்கறிஞரைச் சந்திக்கிறது. அந்த நாயின் இழப்பையும் அதன் உணர்வையும் புரிந்துகொள்ளும் அவர், அதற்கு எவ்வாறு நீதி பெற்றுக்கொடுக்கிறார் என்பது கதை.
இப்படியொரு ஃபான்டசியான கதையை நம்பும்விதமாக எப்படிக் கொடுக்கப் போகிறார்கள் என்ற சந்தேகத்தை மூன்றாவது காட்சியிலேயே துடைத்துப் போட்டு விடுகிறார் இயக்குநர். ஓய்வுபெற்ற நீதிபதியான ஓய்.ஜி.மகேந்திரன் தன்னிடம் வந்த மாறுபட்ட வழக்குப் பற்றிக் கூறும்போது: “ஒரு தாய், தனது குழந்தையைக் கொன்றவர்களை நீதியின் முன் நிறுத்த எப்படிப் போராடினாள் என்பதுதான் அந்த வழக்கு” என்கிறார். அவரைப் பேட்டி காண்பவர், மனதில் ஒரு பெண்ணைக் கற்பனை செய்துகொண்டு கதையைக் கேட்கத் தொடங்குகிறார். ஆனால், அந்தத் தாய், ஒரு நாய்என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த இயக்குநர் கையாண்டிருக்கும் காட்சியமைப்புகள் ஜிலீர் ரகம்.
அதேபோல், ஒரு நாய், புகார் கொடுக்க காவல் நிலையத்துக்குச் செல்வதும், தனக்கு நீதி பெற்றுக்கொடுக்க வழக்கறிஞரை நாடுவதும் சாத்தியமா? என்ற கேள்விக்கு ஒரு ‘ப்ளாஷ் பேக்’கை வைத்திருக்கிறார்கள். ஜான்சி இதற்குமுன் காவல் துறையின் புலனாய்வுப் பிரிவில் என்னவாக இருந்தது, அது ஏன் பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளும் விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஜார்ஜ் மரியான் தரும் சர்பிரைஸும் ஜான்சியின் நீதி கேட்கும் போராட்டத்துக்கு வலுசேர்க்கிறது.
நாயின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கு உதவ வேண்டியது கடமை என்கிற உயிர் நேயச் செய்தியை அழுத்தமாகவும் உணர்வு மேலிடவும் பதிந்துகொடுத்துள்ளார், இயக்குநர் நிதின். மனிதர்களை அண்டிவாழும் விலங்குகளுக்குக் கொடிய குற்றமிழைத்தால் அவர்களைத் தண்டிக்க ஏற்ற சட்டப் பிரிவுகள் இருப்பது பற்றியும் விவரித்திருப்பது கவனிக்க வைக்கிறது.
புகழ் பெற்ற வழக்கறிஞராக வரும் எஸ்.ஏ.சி, 90-களில் தன்னுடைய படங்களின் நீதிமன்றக் காட்சிகளில் வந்து வாதாடும் அதே ‘டெம்போ’வை இதில் தந்திருக்கிறார். எதிர் வழக்கறிஞராக வரும் பாலாஜி சக்திவேல், நாயின் குரைப்பு ஒலியை மொழிபெயர்க்கும் கதாபாத்திரத்தில் வரும் சத்யன், காவல் துறையில் ஜான்சியின் கேர் டேக்கராக இருக்கும் சரவண சுப்பையா ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள். ஜான்சியை சிறப்பாகப் பழக்கியிருக்கும் பயிற்சியாளர் சந்துவும் பாராட்டுக்கு உரியவர்.
கொடைக்கானலில் நடக்கும் கதைக்கு உயிர்கொடுத்திருக்கும் மார்ட்டின் தன்ராஜின் ஒளிப்பதிவு, பி. லெனின் மேற்பார்வையில் மாருதி செய்திருக்கும் கச்சிதமான படத்தொகுப்பு ஆகியவற்றுடன் வந்திருக்கும் இப்படம் விலங்குகளை நேசிக்கும் எவரின் மனதையும் வருடும்.