கேங்ஸ்டரான ஏகே என்கிற ரெட் டிராகன் (அஜித்குமார்), திருந்தி வந்தால் மட்டுமே தன் குழந்தையைத் தொட வேண்டும் என்று தடை விதிக்கிறார் மனைவி ரம்யா (த்ரிஷா). இதனால் தன் குற்றங்களை ஒப்புக் கொண்டு சிறைக்குச் செல்லும் ஏகே, 18 ஆண்டுகள் கழித்து விடுதலையாகி ஆவலோடு தன் மகனை பார்க்க வருகிறார். ஆனால், அவருடைய மகன் குற்றத்தில் சிக்கி சிறைக்குச் செல்கிறார். தன்னுடைய பழைய எதிரிகளின் வேலை இது என்று களமிறங்கும் ஏகே-வுக்கு, ஓர் உண்மை தெரிய வருகிறது. பின்னர் தன் மகனை சிறையில் சிக்க வைத்தவர்களை வீழ்த்தினாரா, தன் மகனை வெளியே கொண்டு வந்தாரா, மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா? என்பது படத்தின் கதை.
ஒரு வரியில் நிமிர்ந்து உட்கார வைக்கும் கதைதான் இது. ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கையில் குடும்ப சென்டிமென்டை குழைத்து படமாகக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
முடிந்தவரை சுவாரஸியமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். படம் தொய்வில்லாமல் வேகமாக நகர்வதில் திரைக்கதையாக்கமும் இயக்குநருக்கு கை கொடுக்கிறது. மும்பையில் தாதாவாக இருந்திருந்தாலும் உலகில் உள்ள கேங்ஸ்டர்கள் எல்லாம் அஜித்தைப் பார்த்தாலே நடுங்கும் அளவுக்கு நாயகப் பிம்பத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார் இயக்குநர்.
அஜித்தின் பழைய ஹிட் படங்களிலிருந்து ஏகப்பட்ட மான்டேஜ் ரெஃபரன்ஸ்களை இயக்குநர் இறைத்துவிட்டிருக்கிறார். த்ரிஷா, சிம்ரன் வரை இந்த ரெஃபரன்ஸ்கள் நீள்கின்றன. படக் காட்சிகளில்தான் அது வருகிறது என்று பார்த்தால் அஜித் படப் பாடல் உட்பட வெவ்வேறு படங்களின் ஹிட் பாடல்களையும் இந்தப் படத்துக்கு ஏற்ப பயன்படுத்தி இருக்கிறார்கள். இது இப்போது ட்ரெண்டாக இருந்தாலும் படத்துக்கு அது ஓவர் டோஸ். இவை எல்லாமே அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தினால் போதும் என்று இயக்குநர் முடிவு செய்துவிட்டதையே உணர்த்துகிறது.
படத்தில் அஜித் சம்பந்தமான காட்சிகள் பலவும் கோர்வையாக இல்லாமல் இருக்கின்றன. திடீரென சிறையில் சண்டை போடுகிறார், சிறையிலேயே செட் அமைத்து மகனிடம் போனில் பேசுகிறார், ஸ்பெயினில் இருக்கும் பெரிய கேங்ஸ்டர்களை நினைத்த நேரத்தில் புகுந்து அதகளம் செய்கிறார். மும்பையில் சிறையில் இருக்கும் ரெடின் கிங்ஸ்லி திடீரென ஸ்பெயின் சிறையில் இருக்கிறார்.
இவை எதற்கும் முன் காட்சிகள் துளியும் கிடையாது. இப்படிப் படத்தில் கண்கட்டு வித்தைக் காட்சிகளை சொருகிவிட்டிருக்கிறார்கள். ஆனால், அஜித் மகனை வில்லன் 18 வயதில் மாட்டிவிடும் காட்சியும், மகனைக் காப்பாற்றுவதில் அப்பா, அம்மா வெவ்வேறு திசையில் பயணிக்கும் காட்சியும் ரசிக்க வைக்கின்றன.
படம் தொடங்கியது முதல் முடியும் வரை அஜித் ராஜ்ஜியம்தான். அவருடைய இளமைத் தோற்றக் காட்சிகளைவிட வயதான காட்சிகளில் இறங்கி விளையாடியிருக்கிறார். மகனுக்காக உருகுவது, எதிரிகளைப் பந்தாடுவது என நடிப்பிலும் மெனக்கெட்டிருக்கிறார். அஜித்தின் மனைவியாக த்ரிஷா நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். வில்லனாக அர்ஜுன் தாஸ் இரட்டை வேடத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால், கேங்ஸ்டருக்குரிய உடல் அமைப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தில் பிரபு, சிம்ரன், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், ஜாக்கி ஷெராப், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, அஜித்தின் மகனாக கார்த்திகேய தேவ் என பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.
படத்துக்கு இசை ஜி.வி. பிரகாஷ்குமார். பாடல்கள் ஒட்டவில்லை என்றாலும் பின்னணி இசையில் நேர் செய்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவில் ஸ்பெயினை அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள். விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பில் நீளமான சண்டைக் காட்சிகளில் கத்திரி போட்டிருக்கலாம். ‘குட் பேட் அக்லி’ அஜித் ரசிகர்களைத் திருப்திபடுத்த!