நான்கு முதல் ஐந்து கதைகளை இணைக்கும் ஆந்தாலஜி திரைப்படங்கள் ஒரு வகை. அதுவே நான்கு கதாநாயகர்களை இணைக்கும் ஒரு கதையில் ஒரு ஆந்தாலஜிக்குரிய சுவாரசியத்தைக் கொண்டுவர முடியுமா? அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்tது இயக்கியிருக்கும் ஸ்ரீநாத்.
தெருத்தெருவாகப் போய் சவரி முடி வியாபாரம் செய்கிறார் மணிகண்டன். கருணாகரன் கிளி ஜோதிடம் பார்ப்பவர். ரமேஷ் திலக் பலகுரல் கலைஞர். ஸ்ரீநாத் பேய் விரட்டும் தொழில் செய்பவர். செய்யும் தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் இந்த நான்குபேருமே கஷ்டப்படுகிறார்கள். இந்த நான்கு பேரும் ஒருவரை ஒருவர் முன்பின் அறிந்திராதவர்கள்.
இவர்களை, சாலையில் கிடக்கும் ஒரு 2000 ரூபாய் நோட்டு நண்பர்களாக ஆக்குகிறது. அந்த 2000 ரூபாய் நோட்டைக் கொண்டுபோய் ‘டாஸ்மாக்’ பாரில் கொடுத்து மது அருந்திக்கொண்டே தங்களுடைய சோக பிளாஷ் பேக்குகளைப் பகிர்ந்துகொள்ள, அதுவே அவர்களுக்குச் சிக்கலைக் கொண்டு வருகிறது. அவர்கள் யாரிடம் சிக்கினார்கள், அவர்களுக்குச் சிக்கலைக் கொண்ட வந்த மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள், இறுதியில் இந்த நால்வரும் என்ன ஆனார்கள் என்று கதை செல்கிறது.
சாலையில் கிடக்கும் ரூபாய் நோட்டு மூலம் நண்பர்கள் ஆகும் நான்கு கதாநாயகர்களின் ப்ளாஷ் பேக்குகள், சோகம் – நகைச்சுவை இரண்டின் கலவையாகக் கவர்கிறது. நால்வருமே ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நகைச்சுவை குணச்சித்திர நடிகர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு, இயக்குநர் நால்வருக்கும் சமமான முக்கியத்துவத்தைக் கதையில் கொண்டு வந்திருக்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் எஸ்.ஏ.பத்மநாபன்.
ஆள் அரவமற்ற கடற்கரைகள், மறைவிடங்களை நாடிச் சென்று காதல்மொழி பேசி, முத்தங்களைப் பரிமாறிக்கொள்ளும் காதலர்களுக்கு அதிரடியான விழிப்புணர்வை வழங்கியிருக்கிறது திரைக்கதை.
ஒரே கதையில், குற்றவுலகம், பலிவாங்கும் படலம், அண்ணன் – தங்கை பாசம், ஆவிகளுடன் பேசும் ஹாரர், தீய மனிதர்களை அழிக்க மறைமுகமாக உதவும் காவல் அதிகாரி என பல அடுக்குகளைத் திரைக்கதையில் அழகாகப் பின்னியிருக்கிறார் இயக்குநர். மணிகண்டன் ஏற்றுள்ள குயில் குமார் கதாபாத்திரம் பாலியல் இச்சையுடன் வலம் வந்தாலும் அதை, ஆபாசமாகவோ கொச்சையாகவோ சித்தரிக்காமல் ஓர் எல்லையுடன் கட்டுப்படுத்தியிருப்பதற்காக இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டு.
இந்த நான்கு நாயகர்கள் தவிர, விடிவி கணேஷ், ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, மறைந்த ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் என படத்தில் நடிகர்கள் கூட்டம் பெரியது. ஆனால், அனைவருக்குமே கதையில் உரிய இடம் இருக்கும்படி அமைக்கப்பட்ட அலுப்புத்தட்டாத திரைக்கதையும் நடிகர்களின் பங்களிப்பும் தான் இந்தப் படத்தை இறுதிவரை சுவாரசியமாக்குகின்றன.
நல்ல கதையும், திரைக்கதையும் நடிகர்கள் பட்டாளமும் இருக்கும் ஒரு படத்தில் திருஷ்டி பரிகாரம்போல் எதற்காக ஒரு ஐயிட்டம் டான்ஸ் வைத்தது மட்டும் உறுத்தல்.
படத்தின் கணிசமான அளவு காட்சிகளில் வரும் யோகி பாபு, தன்னுடைய பஞ்ச் லைனர்கள் மூலம் சிரிக்க வைக்கிறார். அதேநேரம் தனது காதல் மனைவி குறித்து பஞ்ச்கள் என்ற போர்வையில் பேசும் வசனங்களை அடியோடு தவிர்த்திருக்கலாம்.
ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை முழுவதும் நகைச்சுவையால் ‘ட்ரீட்’ செய்திருக்கும் இப்படத்தை மனம் விட்டு சிரித்து ரசிக்கலாம்.