திருப்பூர்: திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருப்பூரில் அவரது உடல் இன்று (ஜன.18) தகனம் செய்யப்பட்டது.
தயாரிப்பாளரான ஜெயமுருகன் மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, 1995-ம் ஆண்டு மன்சூர் அலிகானை கதாநாயகனாக வைத்து ‘சிந்துபாத்’ திரைப்படத்தை தயாரித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, பாண்டியராஜன்,கனகா நடித்த ‘புருசன் எனக்கு அரசன்’ படத்தை தயாரித்தார். இந்த படமும் வெற்றி பெற ‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’, ‘தீ இவன்’ ஆகிய படங்களை தயாரித்தார்.
அதுவரை தயாரிப்பாளராக இருந்த ஜெயமுருகன், முரளி, அருண் பாண்டியன் மற்றும் ஆனந்த் பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த ‘ரோஜா மலரே’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம், வெளியாகி விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ‘அடடா என்ன அழகு’, ’தீ இவன்’ படத்தை தயாரித்த இவர் அந்த படத்திற்கு இசையும் அமைத்து இருந்தார். மேலும், லிவிங்ஸ்டன், உதயா மற்றும் விந்தியா நடித்த ‘பூங்குயிலே’ என்ற படத்தைத் தயாரித்தார். ஆனால், அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டது
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் ஜொலித்துக்கொண்டு இருந்த ஜெயமுருகன் தற்போது சினிமாவை விட்டு விலகி திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரின் உடல் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது .ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் தெற்கு மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உடல் அங்கு இன்று காலை தகனம் செய்யப்பட்டது.
இவரின் திடீர் மறைவு திரைத்துறை மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது