மும்பை: ‘12த் ஃபெயில்’ படத்தின் மூலம் பரலவான கவனத்தை ஈர்த்த பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி திரைத் துறையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு தான் திரைத் துறையில் தனது இறுதி ஆண்டாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: ”கடந்த சில ஆண்டுகள் எனக்கு சிறப்பானவையாக அமைந்தன. உங்களின் ஆதரவுக்கு எனது நன்றிகள். ஆனால் நான் முன்னோக்கி நகரும் இந்த முடிவை, மறுபரிசீலனை செய்து ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக, நடிகனாக, மீண்டும் குடும்பத்தை நோக்கி திரும்ப நினைக்கிறேன். எனவே வரும் 2025-ல் ஆண்டில் நாம் அனைவரும் கடைசியாக ஒருமுறை ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வோம். கடைசி 2 படங்கள் பல்வேறு நினைவுகளை கொடுத்துச் சென்றன. அனைவருக்கும் நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.
விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படத்தை திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி பார்த்தார். முன்னதாக, சில மாநிலங்கள் இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளித்துள்ளன. இந்த சூழலில் பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகரான விக்ராந்த் மாஸ்ஸியின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 2013-ல் திரை துறையில் நடிகராக அறிமுகமானார் விக்ராந்த். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘12த் ஃபெயில்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்தப் படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பு பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.