சாமானியர்களின் எளிய கதையை எடுத்துக்கொண்டு, குடும்ப உறவுகளால் உணர்வுகளையும், பரபர காட்சிகளால் விறுவிறுப்பையும் சேர்த்து ஃபீல் குட் படமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி. ஆனால், படத்தின் அந்த லாட்டரி மையக்கரு, ஏற்கெனவே வெற்றி, ஹரீஷ் பேரடி நடிப்பில் வெளியான ‘பம்பர்’ படத்தின் கதையை நினைவூட்டுவது ஏனோ?!
மாணிக்கம் கதாபாத்திரம், குடும்பப் பின்னணி, வாழ்க்கைச் சூழல் போன்றவற்றைக் காட்டிவிட்டு, சிறிது நேரத்திலேயே ‘நேர்மையான மனிதர், லாட்டரி பரிசு, துரத்தும் வறுமை’ என்ற கதைக்குள் சென்றுவிடுகிறது திரைக்கதை. குடும்பம், மதம், சமூகம் போன்றவற்றில் பொருளாதாரம் செலுத்தும் ஆதிக்கம், அதற்காக வேஷம் கட்டும் மனிதர்கள், எளியவர்களுக்கு எதிரான அதிகாரம் போன்றவற்றை ஆங்காங்கே நையாண்டியாகவும், அழுத்தமான வசனங்களாகவும் விமர்சிக்கிறது படம்.
இரண்டாம் பாதியில் வரும் பரபர காட்சிகளும் பதற்றத்தைக் கூட்டியிருக்கின்றன. மாணிக்கம் கதாபாத்திரத்திற்கான பின்கதை யூகிக்கும்படி இருந்தாலும், கதைக்கருவிற்கான நியாயத்தைச் செய்திருக்கிறது.