சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் இயல்பான மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் நாடகத்தில் இருந்து, கொத்து கொத்தாக சினிமாவுக்கு வந்தவர்கள், தவிர்க்க முடியாத நடிகர்களாக மாறினார்கள். இப்போது அவர்களே நமது முன்னோடி அடையாளங்களாக இருக்கிறார்கள். பிறகு சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள், சினிமாவில் தங்களுக்கான இடத்தைப் போராடிப் பிடித்திருக்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம் என பலரை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.
அதே போல யாராவது ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தால்தான் சினிமா இயக்க முடியும் என்கிற இலக்கணத்தை உடைத்து, யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் குறும்படங்கள் இயக்கிவிட்டு வந்து பலர், தமிழ் சினிமாவின் ‘டைரக்டர்’ இருக்கையைக் கட்டியாகப் பிடித்திருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், ‘சித்தா’ அருண்குமார் என உதாரணமாகப் பலரைச் சொல்லலாம். இதன் அடுத்த கட்டமாக, இப்போது யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள ‘இன்புளூயன்ஸர்’கள் சினிமாவுக்கு வருவது அதிகரித்து வருகிறது.
‘பிளாக்ஷீப்’ யூடியூப் சேனலை நடத்திய விக்னேஷ் காந்த், ‘சென்னை 28’ படத்தின் 2-ம் பாகம் மூலம் நடிகராக அறிமுகமாகி, இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். ‘நக்கலைட்ஸ்’ யூடியூப் மூலம் அறிமுகமான பிரசன்னா பாலச்சந்திரன், சேத்துமான், மண்டேலா, குடும்பஸ்தன் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி, ‘குடும்பஸ்தன்’ மூலம் இயக்குநராகி இருக்கிறார். யூடியூபர் அபிஷேக் ராஜா, ‘ஜாம் ஜாம்’ மூலம் இயக்குநராகிறார்.
யூடியூபர் ஹரி பாஸ்கர், ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ மூலம் ஹீரோவாகி இருக்கிறார். மற்றொரு யூடியூபரான டிடிஎஃப் வாசன், ‘மஞ்சள் வீரன்’ படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இன்ஸ்டாவில் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான ரம்யா ரங்கநாதன், தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்த மோனிஷா பிளஸ்சி, இன்ஸ்டாவில் ஒரு மில்லியன் பாலோயர்களை வைத்திருக்கிறார்.
அடுத்து ரஜினியின் கூலி, விஜய்யின் ஜனநாயகன் படங்களில் நடித்து வருகிறார். விஜே சித்து, மதன் கவுரி உட்பட பல ‘இன்புளூயன்ஸர்’கள் நடிகர்களாகி இருக்கிறார்கள். ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலம் பல்வேறு விஷயங்களை நகைச்சுவையாக வழங்கி வரும் சுதாகர், கோபி சில படங்களில் நடித்தனர். இப்போது படம் தயாரித்து நடித்து வருகின்றனர். இன்னும் பல ‘இன்புளூயன்ஸர்ஸ்’ சினிமாவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நடிகர், நடிகைகளை ரசிகர்கள் பின்தொடர்வதைப் போல இவர்களுக்கும் ஏராளமான ‘ஃபாலோயர்கள்’ இருப்பதால் சினிமா வாய்ப்புகள் எளிதாக கிடைக்கின்றன.
ஹாலிவுட் படங்களிலும் சில வருடங்களுக்கு முன்பே ‘இன்புளூயன்ஸர்’ வரவு தொடங்கிவிட்டது. அங்கு, அடிசன் ரே, ஜேக் மார்டின், லிசா கோஷி, கிங் பாக் உட்பட பல ‘இன்புளூயன்ஸர்’கள் இப்போது நடித்து வருகின்றனர். “அவர்களுக்கு ஃபாலோயர்கள் அதிகம் இருப்பதால் படங்களில் நடிக்க வைப்பதன் மூலம் சில சதவிகித பார்வையாளர்களை தியேட்டருக்கு இழுக்க முடியும் என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள். அது உண்மையும் கூட. அதனால் அவர்களை நடிக்க வைப்பதைத் தவிர்க்க முடியாது. அவர்களால் பார்வையாளர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகவும் முடியும். ஆனாலும் இயக்குநர்கள் அவர்களை, எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். அடுத்து அவர்கள்தான் சினிமாவின் எதிர்காலமாகவும் இருக்கலாம்” என்கின்றனர் திரைத்துறையினர்.
இதுபற்றி ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமியிடம் கேட்டபோது, “சினிமா, ஜனநாயகமான மீடியம். அதை இன்னும் ஆழமான ஜனநாயகமாக்கி இருக்கிறது ‘இன்புளூயன்ஸர்’ வரவு. இதில் எனக்கும் சேர்த்துச் சொல்ல வேண்டியது, ‘வெறும் புகழை மட்டும், திறமை என்று நம்பிவிடக் கூடாது’ என்பதைத்தான். புகழ் மூலமாக வாய்ப்புக் கிடைத்தாலும், சினிமாவுக்கான பயிற்சிகளை இழந்துவிடக் கூடாது” என்கிறார்.