29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே…
தனுசு: நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்யாத தனுசு ராசி அன்பர்களே! நீங்கள் வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர். சாதனையாளர்களாக வலம் வந்து மற்றவர்களுக்கு பயன் தருபவர்கள். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது.
கிரகநிலை: இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையாக உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலன்கள்: எதிலும் நிதானமாகவும், அளவெடுத்துச் சிறப்பாகவும் செயல்பட வைப்பார். இதனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள், சிரமமில்லாமல் கை வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் உங்களின் செவிகளைக் குளிர்விக்கும்; ஆதாயமும் நல்கும்.
உங்களின் சுய முயற்சியின் அடிப்படையில் செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள். உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும் நன்மை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களின் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுபடுவீர்கள்; அதற்கான இழப்பீடுகளும் கிடைக்கும்.
புத்தி தெளிவுடன் சனி பகவான் சில சந்தர்ப்பங்களில் அவசர புத்தியைக் கொடுப்பார். எதிர்பாராத விதத்தில் தீயவர்களின் தொடர்பும் ஏற்படும். இதற்காக அஞ்ச தேவையில்லை. நீங்கள் ஓய்வெடுக்காமல் உழைத்துக்கொண்டே இருப்பீர்கள். அதனால் நற்பலன்களும் உள்ளன. செய்தொழிலில் தினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மற்றவர்களைத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அளவிற்கு உயர்வீர்கள். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகள் புரிய வாய்ப்பு கிடைக்கும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வத்தோடு செல்வாக்கும் உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.
அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இணைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கவுரவத்துக்கு பங்கம் ஏற்படாது. சககலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள்.
மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்; எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவீர்கள். விளையாட்டுகளில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம்.
மூலம்: வேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.
பூராடம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணம், காசுகள் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்கப்பெறுவீர்கள்.
பரிகாரம்: முடிந்த போதெல்லாம் அல்லது வியாழக்கிழமைகளில் மட்டுமாவது குருவை வழிபடவும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் சொல்வது நன்மையைத் தரும். துளசி தளத்தை பெருமாளுக்கு வியாழன் தோறும் அர்ப்பணித்து வணங்கிவர அவரின் கிருபை கிடைக்கும் | சனி பகவானின் பார்வைகள்:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |