ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த ராஜுவும் (நாக சைதன்யா) சத்யாவும் (சாய் பல்லவி) காதலித்து வருகின்றனர். குஜராத் சேட் ஒருவருக்காக ராஜுவும் அவர் ஊரைச் சேர்ந்தவர்களும் அரபிக்கடலில் மீன் பிடிக்கிறார்கள்.
ஒருமுறை புயல் காரணமாகப் பாகிஸ்தான் கடல் எல்லைக்குச் சென்றுவிடுகிறது நாக சைதன்யா குழுவின் படகு. பாகிஸ்தான் கடலோரக் காவல்படை அவரையும் அவருடன் மீன் பிடிக்கச் சென்றவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது. சிறையிலிருந்து அவர்களை மீட்கப் போராடுகிறார் சத்யா. அவர் போராட்டம் வென்றதா? இருவரும் இணைந்தார்களா என்பது கதை.
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைக் கதையின் பின்னணியில் அழகான காதல் கதையை இணைத்து படமாக்கி இருக்கிறார், இயக்குநர் சந்து மொண்டேட்டி. தண்டேல் என்றால் தலைவன்.
வருடத்தில் 9 மாதங்கள் கடலுக்குள் மீன் பிடிப்பதும் மற்ற நாட்களில் காதலி சத்யாவுடன் நாயகன் பொழுதைக் கழிப்பதான காட்சிகள் வலிந்து திணிக்காமல் இயல்பாகப் பின்னப்பட்டுள்ளன. போக வேண்டாம் என்று வலியுறுத்தியும் கேட்காமல் சென்று, பாகிஸ்தான் சிறையில் வாடும் ராஜு மீது, சத்யாவுக்கு எழும் நியாயமான கோபமும் அதனால் அவர் எடுக்கும் முடிவும் யதார்த்தமாக இருக்கிறது. ராஜு, சத்யா கதாபாத்திர வடிவமைப்பும் ரசனை.
கலங்கரை விளக்கமும் மீன்கொடியும் காதல் சாட்சிகளாக இருப்பதும் மீனவர்கள் வீட்டுக்குத் திரும்பும்வரை குடும்பத்தில் இருக்கும் பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்ட மீனவ கிராம விஷயங்களை யதார்த்தமாகப் பேசுகிறது படம். ஆனால், பாகிஸ்தான் சிறையில் நடக்கும் சம்பவங்களும் அங்கு ராஜு நடத்தும் ஹீரோயிச நிகழ்வுகளும் அவர் ‘தண்டேல்’ என்பதை நிறுவ வைக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும் இது ‘தெலுங்கு படம்யா’ என்பதை நினைவூட்டி நம்மை பின்னிழுத்து விடுகின்றன.
நாக சைதன்யா – சாய் பல்லவிக்கான காதல் கெமிஸ்ட்ரி, நிஜ காதலர்களைப் பார்ப்பது போல உணர வைக்கிறது. ஒவ்வொரு ஃபிரேமிலும் நடிப்பால் ஈர்க்கிறார் சாய் பல்லவி. அவருடைய சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களும் ரசிக்க வைக்கின்றன. நடனக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
ஒரு மீனவராகத் தன்னை மாற்றிக் கொள்ள மெனக்கெட்டிருக்கும் நாக சைதன்யா, காதல், ஆக்ஷன் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரண்டாவது நாயகனாக வரும் கருணாகரனும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், பாகிஸ்தான் சிறை அதிகாரி பிரகாஷ் பெலாவடி, நாகசைதன்யாவின் அம்மாவாக வரும் கல்பலதா என துணை கதாபாத்திரங்களும் கவனிக்க வைக்கிறார்கள்.
புயலில், கடலுக்குள் படகுகள் தத்தளிக்கும் காட்சிகளிலும் பாடல்களிலும் ஷம்தத் சைனுதீனின் ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. காட்சிகளைக் கோர்வையாக அடுக்கியிருக்கின்றன, நவீன் நூலியின் படத்தொகுப்பு.
முதல்பாதி வரை கச்சிதமாகச் செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் மிகை யதார்த்தத்துக்குச் சென்றுவிடுவதாலும் தர்க்கப் பிழைகளாலும் தடுமாறி விடுகிறது. அதைச் சரி செய்திருந்தால் ‘தண்டேல்’ அழுத்தமான படமாக இருந்திருக்கும்.