சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடிப்பில் மே 1-ல் வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ட்ரெய்லர் ‘டார்க் காமெடி’ வகைமையில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதில், ஒளிப்பதிவாளராக அரவிந்த் விஸ்வநாதன், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ட்ரெய்லர் முழுவதுமே படத்தின் ஒன்லைனை வெளிப்படுத்தி வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக தமிழகத்தில் குடியேறும் இலங்கைத் தமிழரின் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளே மையம். சசிகுமார் – சிம்ரன் இருவரும் இலங்கைத் தமிழ் தம்பதிகளாக கச்சிதமாக பொருந்துகின்றனர்.
இந்தக் குடும்பத்தை ‘காப்பாற்றும்’ கதாபாத்திரத்தில் ட்ரெய்லர் முழுவதுமே கவனம் ஈர்க்கிறார் யோகி பாபு. சசிகுமாரும் சிம்ரனும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது தெரிகிறது. குறிப்பாக, இதில் வரும் அந்தக் குட்டிப் பையன் தனியாக கவனம் ஈர்க்கிறான். ஒட்டுமொத்தமாக, ‘டார்க் காமெடி’ ஜானரில் புலம்பெயர் தமிழர்களின் நிலையை காட்டும் வகையில் முக்கியப் படைப்பாகவும், சுவாரஸ்ய படமாகவும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அமையும் என்பதையே ட்ரெய்லர் உணர்த்துகிறது. வீடியோ...