’ஓ மை கடவுளே’ என்ற ஃபான்டஸி காதல் கதைக்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்துவும், ‘லவ் டுடே’ கொடுத்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனும் இணைந்து களம் கண்டுள்ள படம் ‘டிராகன்’. படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது இது சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் அடுத்த பாகம் என்ற கிண்டல்கள் எழுந்தன. ஆனால், அதையெல்லாம் தவிடுபொடியாக்கி ஒரு ‘பக்கா’ பொழுதுபோக்கு படமாக வந்துள்ளது ‘டிராகன்’
கல்லூரியில் ‘டிராகன்’ என்ற பெயரில் அட்டகாசம் செய்யும் டி.ராகவன் (பிரதீப் ரங்கநாதன்), கல்லூரி முதல்வருடன் (மிஷ்கின்) ஏற்படும் பிரச்சினையால் 43 அரியர்களுடன் கல்லூரியை விட்டு பாதியிலேயே வெளியேறுகிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு வேலை வெட்டி எதுவும் செய்யாமல் நண்பர்களிடம் பணம் வாங்கி பெற்றோரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த ஊதாரித்தனத்தால் அவரது காதலி (அனுபாமா பரமேஸ்வரன்) பிரேக்கப் செய்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்.
முன்னாள் காதலியால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்கி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து போலி டிகிரி மூலம் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து கைநிறைய சம்பாதிக்கிறார். இதனையடுத்து அவருக்கு பெரிய தொழிலதிபரின் (கே.எஸ்.ரவிக்குமார்) மகளை (கயாடு லோஹர்) திருமணம் செய்வதற்கான வரன் தேடி வருகிறது. வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென சிக்கல் ஒன்று முளைக்கிறது. அதிலிருந்து ஹீரோ வெளியே வந்தாரா என்பதை குதூகலமாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கிறது ‘டிராகன்’.
இந்தப் படத்தின் கதையை மேலோட்டமாக படித்தால் சிவகார்த்திகேயனின் ‘டான்’ நம் மனக்கண்ணில் நிழலாடும். படத்தின் முதல் 30 நிமிடங்களே கூட சில ‘கிரிஞ்சு’ ரக காட்சிகளால் அந்த சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியது. ஆனால், கல்லூரி பகுதியில் கதாபாத்திர அறிமுகங்கள் முடிந்து மெயின் கதைக்குள் படம் நுழைந்தது முதல் டாப் கியரில் செல்கிறது. அதன் பிறகு எங்கும் நிற்கவே இல்லை. நகைச்சுவை, எமோஷனல், கலகலப்பு என ஒரு ரகளையான ரோலர்கோஸ்டர் போல படம் செல்கிறது.
படத்தின் பலமே அதன் கதாபாத்திர வடிவமைப்புகள்தான். தேவையில்லாமல் எந்தவொரு திணிப்புகளும் இல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நம் மனதில் ஆழமாக பதியும்படி எழுதியுள்ளார் இயக்குநர் அஸ்வத். பொதுவாக இது போன்ற கதைகளில் திரைக்கதைக்கு தொடர்பே இல்லாத ரொமான்ஸ் காட்சிகள், பாடல்கள் என நேரத்தை ஓட்ட இடம்பெறச் செய்வது வழக்கம். திரைக்கதை ஓரளவு நன்றாக இருந்தாலே அது ரசிகர்களுக்கு ஒரு குறையாக தெரியாது. ஆனால் அதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்தும் அவற்றை தவிர்த்தற்காகவே இயக்குநரை மனதார பாராட்டலாம்.
படத்தில் பல உணர்வுபூர்வ தருணங்களும், நல்ல நகைச்சுவை காட்சிகளும் உண்டு. குறிப்பாக பிரதீப் ரங்கநாதனின் பெற்றோர் தொடர்பான காட்சிகள், அனுபாமாவின் பிரேக்கப்பும் அதைத் தொடர்ந்த காட்சிகளும் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளன. அதேபோல பிரதீப் ரங்கநாதன், கவுதம் மேனனுடன் ஆன்லைன் இன்டர்வியூவில் கலந்து கொள்ளும் காட்சி உள்ளிட்ட சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் காட்சிகளும் குறிப்பிடத்தக்கவை.
ஹீரோவாக பிரதீப்புக்கு இது இரண்டாவது படம். முந்தைய படத்தில் இருந்த ‘தனுஷ்’ பாணி நடிப்புக்கு குட்-பை சொல்லிவிட்டு இதில் முடிந்தவரை தனக்கென ஒரு பாணியை உருவாக்கியுள்ளார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். படத்தில் ஹீரோவுக்கு அடுத்ததாக பார்வையாளர்களின் பாராட்டை பெறுபவர் இயக்குநர் மிஷ்கின். ஏற்கெனவே பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் இது அவருக்கு பேர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அனுபாமா பரமேஸ்வரன் முதல் பாதியில் சிறிது நேரமே வந்து ஏமாற்றினாலும், இரண்டாம் பாதியில் அவருக்கு ஓர் அழுத்தமான பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவரும் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
மற்றொரு நாயகி கயாடு லோஹர். அனுபாமாவை விட முக்கியத்துவம் குறைந்த கேரக்டர்தான் இவருக்கு என்றாலும், குறையில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். பொதுவாக கமர்ஷியல் படங்களில் சோஷியல் மீடியா வேல்யூவுக்காக யூடியூப் பிரபலங்களை உப்புக்கு சப்பாணியாக நடிக்க வைப்பதுண்டு. ஆனால் அப்படி இல்லாமல் இதில் விஜே சித்து, ஹர்ஷத் கான் இருவருக்குமே நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
இரண்டாம் பாதியில் ஹர்ஷத் கான் செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. ஹீரோவின் தந்தையாக வரும் ஜார்ஜ் மரியான் வழக்கம்போல தனது கச்சிதமான நடிப்பை தந்திருக்கிறார். கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் சில இடங்களில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்கள்.
கமர்ஷியல் படம் என்பதாக இரைச்சலை வாரி இறைக்காமல் காதுக்கு ரம்மியமான பின்னணி இசையையும், பாடல்களையும் கொடுத்திருக்கிறார் லியோன் ஜேம்ஸ். நிகேத் பொம்மியின் கேமரா வழியே காட்சிகள் கலர்ஃபுல் ஆகியிருக்கின்றன.
இரண்டாம் பாதியில் சில இடங்களில் தொய்வு, கல்லூரி சண்டை காட்சி, ஒரே பாடலில் ஓஹோவென வாழ்க்கை மாறுவது உள்ளிட்ட சில குறைகள் இருந்தாலும் க்ளைமாக்ஸில் சொல்லப்படும் நீதி பார்ப்பவர்களை நிச்சயம் கண்கலங்க வைத்துவிடும்.
கல்லூரியின் ரவுடித்தனம் செய்வது ஹீரோயிசம், அரியர் வைப்பது மாஸ் என மற்ற படங்களைப் போல நியாயப்படுத்தாமல் கல்விதான் நம்மை எப்போதும் உணர்த்தும் என்பதையும், நாம் செய்யும் ஒரு சிறு சிறு விஷயங்கள், அது நல்லதோ கெட்டதோ, பிறரது வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ‘2கே தலைமுறையினரும்’ புரிந்து கொள்ளும் வகையில் அழுத்தமாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் சொன்ன வகையில் அஸ்வத் மாரிமுத்தும், பிரதீப் ரங்கநாதனும் ஜெயித்திருக்கின்றனர்.