’டாக்கு மகாராஜ்’ படத்துக்கு இன்னும் வரவேற்பு கிடைத்திருக்கலாம் என்று தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 12-ம் தேதி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் ‘டாக்கு மகாராஜ்’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை என்றாலும், அதனை தயாரிப்பாளர் நாக வம்சி சில பேட்டிகளில் அதை மறுத்திருந்தார். மேலும், இப்படத்தின் வெற்றியும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
இதனிடையே ‘டாக்கு மகாராஜ்’ படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை என்பதை ‘மேட் ஸ்கெயர்’ பட விழாவில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் நாக வம்சி. ‘டாக்கு மகாராஜ்’ குறித்த கேள்விக்கு “’சங்காரந்திக்கு வஸ்துணாம்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அப்படத்தின் தாக்கம் அதிகமாகி முன்னுரிமை பெற்றது. ‘டாக்கு மகாராஜ்’ படத்துக்கு திரையரங்கில் இருந்து எதிர்பார்த்த வசூல் வராததில் வருத்தம் தான். பாலகிருஷ்ணாவின் வலுவான பகுதிகளில் அப்படத்துக்கு நல்ல வசூல் கிடைத்தது.
தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் வெங்கடேஷ் இருவருமே ‘சங்கிராந்திக்கி வஸ்துணாம்’ படத்தின் மூலம் பெரும் வெற்றி பெற்றார்கள். அதே வேளையில் ‘டாக்கு மகாராஜ்’ படத்தின் வரவேற்பு குறித்தும் மகிழ்ச்சியே. ஆனால் திரையரங்குகளில் இன்னும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
பாபி கோலி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, பாபி தியோல், பிரக்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டாக்கு மகாராஜ்’. நாக வம்சி தயாரிப்பில் வெளியான இப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். பிப்ரவரி 9-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.