சென்னை: ஜெயம் ரவி நடிக்கும் 34-வது படத்தின் பணிகள் பூஜையுடன் சனிக்கிழமை (டிச.14) தொடங்கின. டிசம்பர் 16-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
‘பிரதர்’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில், ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஜெனி’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்தப் படங்களையடுத்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். ஜெயம் ரவியின் 34-வது படமாக உருவாகும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார்.
‘பிரதர்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைகிறார் ஜெயம் ரவி. தவ்தி ஜிவால் நாயகியாக நடிக்கிறார். பி.வாசுவின் மகன் சக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கின. படப்பிடிப்பு திங்கட்கிழமை தொடங்கும் என கூறப்படுகிறது. இதனிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.