ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. தற்போது தயாரிப்பாளர் தாணு அளித்துள்ள பேட்டியில், “ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும். ஒரு வாரத்துக்கு முன்பு வெற்றிமாறனை சந்தித்த போது 25 நிமிடங்கள் கதை சொன்னார். இதுவே போதும் என்று கூறினேன். அந்த 25 நிமிடங்கள் கதையிலேயே அப்படியொரு திரைக்கதை, நடிப்பு இருக்கிறது. உலகத் தமிழர்களுக்கு இப்படம் ஓர் அத்தியாயம், கலாச்சாரமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தாணுவின் இந்தப் பேட்டி சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. பலமுறை இதே போன்று படப்பிடிப்பு தொடங்குவது தொடர்பாக தாணு பேட்டியளித்துள்ளார். ஆனால், தொடங்கப்படாமல் இருந்தது. இந்தமுறை கண்டிப்பாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தொடங்கப்படவுள்ள படம் ‘வாடிவாசல்’. இதில் சூர்யா நாயகனாக நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.