ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் ‘ஜூராசிக் பார்க்’. டைனோசரஸ் இனத்தை திரையில் தத்ரூபமாக காட்டி, கிராபிக்ஸில் ஓர் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது இப்படம். இப்படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. அதன் பிறகு ஸ்பீல்பெர்க் இப்படங்களிலிருந்து விலகிக் கொண்டார்.
பின்னர் பல ஆண்டுகளுக்கு ‘ஜுராசிக் வேர்ல்ட்’ என்ற பெயரில் மூன்று பாகங்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ என்ற படத்தை யுனிவர்சல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – ஜுராசிக் பார்க்கை உருவாக்கும்போது விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்ட டைனோசரஸ் இனங்கள் ஒரு தனித்தீவில் அடைக்கப்பட்டுள்ளன. அதாவது ஜுராசிக் பார்க்கில் வைக்க தகுதியில்லாமல் ஆராய்ச்சியில் தோல்வியடைந்த அல்லது மிகவும் ஆபத்தான டைனோசரஸ் இனங்கள் அவை. அந்த தீவை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அங்கு சென்று சிக்கிக் கொள்வதாக ட்ரெய்லரில் காட்டப்படுகிறது.
ஏற்கெனவே ஆறு பாகங்களாக அடித்து துவைத்த கதையை மீண்டும் புதிதாக ஒரு களத்துடன் தொடங்கியுள்ளது யுனிவர்சல் நிறுவனம். இதுவரை பார்த்த டைனோசர்கள் இனத்தை தாண்டி இதில் பல புதிய இனங்கள் வருகின்றன. ஜுராசிக் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த ஹாரர் + த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட ஒரு படமாக இருக்கும் என்று தோன்றுகிறது. இப்படம் வரும் ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ ட்ரெய்லர் வீடியோ: