மேடை நாடகங்களில் பாடகியாகவும் நடிகையாகவும் தனது 13 வயதிலேயே திறமையை நிரூபித்தவர், பி.கண்ணாம்பா. ஆந்திர மாநிலம் ஏலூருவை சேர்ந்த அவர், நாடக சமாஜம் என்ற நாடக மன்றத்தில் சேர்ந்து புராண, சமூக நாடகங்களில் முதன்மை வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். அப்போது நாடக ஒப்பந்தக்காரராக இருந்த கே.பி.நாகபூஷணம், கண்ணாம்பாவைச் சந்தித்தார். நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இருவரும் 1934-ல் திருமணம் செய்து கொண்டனர்.
பிறகு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி நாட்டிய மண்டலி என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி தென்னிந்தியா முழுவதும் நாடகங்களை நடத்தி வந்தனர். இதன் அடுத்தக்கட்டமாக சினிமாவில் கவனம் செலுத்துவதற்காகச் சென்னை வந்தனர். ஹரிச்சந்திரா (1935) மூலம் சினிமாவில் அறிமுகமானார், பி.கண்ணாம்பா. சில படங்களில் நடித்த பிறகு, இந்த ஜோடி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி நிறுவனம் மூலம் படங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தனர். அதில் பெரும்பாலான படங்களை நாகபூஷணமே இயக்கினார்.
பி.கண்ணாம்பாவின் திறமையை வியந்த ஜெமினி எஸ்.எஸ்.வாசன், கண்ணாம்பா தயாரித்தப் படங்களை விநியோகம் செய்தார். நிதியுதவியும் செய்தார். முன்னணி நடிகர்களைத் தவிர, பெரும்பாலான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை ஜெமினியில் இருந்து பயன்படுத்திக் கொண்டனர். தமிழ், தெலுங்கில் அவர்கள் தயாரித்த படங்களில் ஒன்று, ‘சவுதாமினி’.
நாகபூஷணம் இயக்கிய இந்தப் படத்தில் பி.கண்ணாம்பாவுடன் எம்.கே.ராதா, எஸ்.வரலட்சுமி, ஏ.நாகேஸ்வர ராவ், டி.ஆர்.ரஜினி, டி.ஆர்.ராமச்சந்திரன், கே.எஸ்.அங்கமுத்து, குமாரி வனஞ்சா ஆகியோர் நடித்தனர். பி.எல்லப்பா ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்தார். வசனத்தை உதயகுமார் எழுதினார். ஜெமினி ஸ்டூடியோஸ் படத்தை விநியோகித்தது.
மால்வா மன்னர் விக்ரமசேனனுக்கும் (எம்.கே.ராதா) ராணி சவுதாமினிக்கும் (பி.கண்ணாம்பா) குழந்தை பாக்கியம் இல்லை. முனிவர் ஒருவர் அளித்த வரத்தின்படி சவுதாமினி தாய்மை அடைகிறார். இதற்கிடையே மன்னருக்கு அரசவை நடன மங்கையுடன் தொடர்பு ஏற்படுகிறது. மனைவியை வெறுக்க ஆரம்பிக்கிறார் மன்னர்.
அரண்மனையில் சவுதாமினி இருந்தால் ஆபத்து என்பதை அறியும் அமைச்சர், அவரை தப்பிச் செல்லும்படி கூறுகிறார். அதற்குள், அமைச்சருக்கும், ராணிக்கும் தொடர்பு இருப்பதாக, மன்னரிடம் கூறுகிறார் நடன மங்கை. அமைச்சருக்கு மரணதண்டனை விதித்து, ராணியை காட்டுக்கு விரட்டுகிறார் மன்னர். காட்டில் ராணிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அவனுக்கு உதயசேனன் என்று பெயரிட்டு வளர்க்கிறார். ஒரு கட்டத்தில், மன்னரின் பார்வையைப் பறித்து, நாட்டையும் தன்வசப்படுத்திக் கொள்கிறார் நடன மங்கை.
இதையடுத்து நாட்டையும், மன்னரையும் காப்பாற்ற, தனது மகன் உதயசேனனை (நாகேஸ்வர ராவ்) அனுப்புகிறார் சவுதாமினி. செல்லும் வழியில் பக்கத்து நாட்டு இளவரசி ஹேமாவதியை (எஸ்.வரலட்சுமி) கண்டு காதல் கொள்கிறார், உதயசேனன். பிறகு நடன மங்கையின் சூழ்ச்சியை முறியடித்து, நாட்டை எப்படி மீட்கிறார் என்பது கதை.
தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தில் தெலுங்கில் எம்.கே.ராதாவுக்குப் பதில் சிஎஸ்ஆர் நடித்தார். இருமொழிகளிலும் உதயசேனனாக, நாகேஸ்வர ராவே நடித்தார். படத்தில் ஒரு காட்சியில், கடும் புயலுக்கு மத்தியில் காட்டில் தனியாக விடப்பட்ட பெண்ணாக, கண்ணாம்பா நடிக்க வேண்டும். மழை பெய்வது போன்ற காட்சிக்காக, மேலிருந்து தண்ணீர் ஊற்றப்பட்டு, ஒரு பெரிய விசிறியைப் பயன்படுத்திப் பலத்த காற்றைச் செயற்கையாக உருவாக்கினர்.
பி.கண்ணாம்பா தனது நடிப்பில் அர்ப்பணிப்புடன் இருப்பவர். ஷாட் முடிந்த பிறகும் இயக்குநர் ‘ஓகே’ சொல்ல மறந்துவிட்டாராம். இதனால் மழையில் நனைந்தபடியே அப்படியே இருந்திருக்கிறார் கண்ணாம்பா. படக்குழுவினர், எழுந்து வர கூறிய பிறகும் வரவில்லை. “இயக்குநர் ‘ஓகே’ சொன்ன பிறகுதான் அந்த மனநிலையில் இருந்தும் காட்சியிலிருந்தும் வெளியேறுவது வழக்கம். இயக்குநர் அதை சொல்லாவிட்டால் நான் எப்படி வெளியேற முடியும்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். பிறகு இயக்குநர் ஓகே சொன்ன பிறகுதான் அந்த இடத்திலிருந்து எழுந்தாராம்!
1951-ம் ஆண்டு ஏப்.14-ல் வெளியான இந்தப் படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. தமிழில் சுமாரான வெற்றியை பெற்றது.
> முந்தைய கட்டுரை: நீதிக்குத் தலைவணங்கு: எம்.ஜி.ஆர் – பா.நீலகண்டன் கூட்டணியின் ‘18’ சென்டிமென்ட் | அரி(றி)ய சினிமா