வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த நடிகர் சைஃப் அலிகானுக்கு மும்பை லீலாவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இன்று (ஜன.16) அதிகாலை 2:30 மணியளவில் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள அவருடைய இல்லத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாகத் தெரிகிறது. அப்போது நடைபெற்ற சண்டையில் சைஃப் அலி கான் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை போலீஸாரின் தகவலின்படி, அடையாளம் தெரியாத நபர் சைஃப் அலிகான் இல்லத்துக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது கத்தியுடன் வந்த நபருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக சைஃப்அவர் காயமடைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவத்துக்கு பிறகு லீலாவதி மருத்துவமனைக்கு சைஃப் அலி கான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் பற்றி அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மும்பை லீலாவதி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நீரஜ் உத்தமானி கூறுகையில், “சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவமனை அழைத்துவரப்பட்டார். அவருக்கு 6 இடங்களில் காயங்கள் இருந்தன. ஒரு காயம் அவரது முதுகுத் தண்டவடத்தின் அருகே உள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை செய்கிறோம். அவருக்கு நரம்பியல் அறுவை நிபுணர் நிதின் டாங்கே, காஸ்மடிக் அறுவை நிபுணர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி உள்ளிட்டோர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னரே காயத்தின் தன்மை பற்றி மேலதிக தகவல்களைத் தெரிவிக்க முடியும்.” என்றார்.
சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டாரா அல்லது மர்ம நபருடன் ஏற்பட்ட மோதலால் காயமடைந்தாரா உள்ளிட்டவை குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து மும்பை போலீஸார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.