பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா, லண்டனில் உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் சிம்பொனி இசையை, இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை அரங்கேற்றம் செய்தார். உலகின் சிறந்த ராயல் பில் ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து இந்த சிம்பொனியை அரங்கேற்றினார்.
ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 45 நிமிடம் சிம்பொனி இசை அரங்கேற்றம் நடந்தது. அவரின் இசைக் குறிப்புகளை 80 இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம் ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை அரங்கேற்றிய முதல் நபர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார்.
இந்நிலையில் சிம்பொனி இசையை அரங்கேற்றிவிட்டு நேற்று காலை அவர் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, திரைப்பட இயக்குநர் சங்க செயலாளர் பேரரசு ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் இளையராஜா கூறியதாவது: என்னை அன்போடும், வாழ்த்தோடும் அனுப்பி வைத்தீர்கள். இப்போது அரசு மரியாதையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் வரவேற்றிருக்கிறார். அதற்கு நன்றி. சிம்பொனி இசையை 80 இசைக் கலைஞர்கள் இசைத்தனர். அரங்கேற்றம் முடிந்த பிறகு அந்த மேடையில் என் பாடல்களையும் பாடினேன். அதையும் கொண்டாடினார்கள். இந்த சிம்பொனியை 13 நாடுகளுக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்கான தேதிகளும் உறுதி செய்யப்பட்டுவிட்டன. அக்.6-ம் தேதி துபாய், செப்.6-ம் தேதி பாரிஸ், அடுத்து, ஹம்பர்க் என பல்வேறு உலக நகரங்களுக்கு செல்ல இருக்கிறேன்.
தமிழ்நாட்டிலும் நடத்த திட்டமிட்டுள்ளேன். சிம்பொனி இசையை யாரும் டவுன்லோடு செய்து கேட்க வேண்டாம். லண்டனில் ஓர் அரங்கத்தில் அமைதியோடு கேட்டார்கள். அப்படி கேட்டால்தான் அனுபவிக்க முடியும். ரசிகர்கள், என்னை இசைக் கடவுள் என்கிறார்கள். நான் இசைக் கடவுள் இல்லை. இளையராஜா அளவுக்குக் கடவுளைக் கீழே இறக்கிவிட்டார்களே என்றுதான் தோன்றுகிறது. நான் சாதாரண மனிதன்தான்.
எனக்கு 82 வயது ஆகிவிட்டதே, இனி என்ன செய்ய முடியும்? என்று யோசிக்காதீர்கள். இது ஆரம்பம்தான். பண்ணைபுரத்தில் இருந்து வரும்போது வெறும் காலுடன் தான் நடந்தேன். இப்போதும் என் காலில் தான் நிற்கிறேன் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். அவர்கள் இதை முன்னுதாரணமாகக் கொண்டு அவரவர்கள் துறையில் முன்னேறி இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு இளையராஜா கூறினார்.