‘தண்டேல்’ இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் சூர்யா நடிக்க படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டேல்’. இதனை சந்து மொண்டேட்டி இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழில் இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் வந்திருந்தது படக்குழு. அப்போது தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அளித்த பேட்டியில், “நானும் சூர்யாவும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்கள். அவருடன் இணைந்து பணிபுரிய வேண்டும். சந்து மொண்டேட்டியும் நானும் அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசி வருகிறோம். அந்தப் பேச்சுவார்த்தை ஆரம்ப நிலையில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் இயக்குநர் சந்து மொண்டேட்டி தெலுங்கில் அளித்த பேட்டியொன்றில் அடுத்த படம் குறித்த கேள்விக்கு, சூர்யாவுக்கு 2 கதைகள் கூறியிருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், தன்னோடு சூர்யா பணிபுரிய ஆர்வமாக இருப்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.