சங்ககிரி ராஜ்குமார் இயக்கியுள்ள படம், ‘பயாஸ்கோப்’. வரும் 3-ம் தேதி வெளியாகும் இதில் சத்யராஜ், சேரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாஜ்நூர் இசையமைத்துள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பும், ‘ஆஹா ஃபைண்ட்’ டிஜிட்டல் தளத்தின் தொடக்க விழாவும் சென்னையில் நடைபெற்றது. இதில் ஆஹா டிஜிட்டல் தள தலைமை நிர்வாக அதிகாரி ரவிகாந்த், ‘புரொடியூசர் பஜார்’ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே. திருநாவுக் கரசு, இணை நிறுவனர் விக்ரம், இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் படத்தில் நடித்த பாட்டிகள் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சங்ககிரி ராஜ்குமார் பேசும்போது, ‘‘சுயாதீன படங்கள்தான் மக்களின் பிரச்சினையை பேசும். சிறிய முதலீட்டுத் திரைப்படங்கள் தான் மக்களின் வாழ்வியலையும், மக்களின் துக்கங்களையும் பேசுகின்றன. உலகம் முழுவதும் சுயாதீன படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கான சந்தை கடினமாக இருந்தது. அதை தற்போது ‘புரொடியூசர் பஜார்’ மற்றும் ‘ஆஹா ஃபைண்ட்’ சந்தைப்படுத்தும். அதனால் புதியவர்கள் கவலைப்பட வேண்டாம். இதைத் தொடர்ந்து என் இயக்கத்தில் உருவான 2 திரைப்படங்கள் வெளியாக உள்ளன” என்றார். தியேட்டர் ரிலீஸுக்கு பிறகு ‘ஆஹா ஃபைண்ட்’ டிஜிட்டல் தளத்தில் ‘பயாஸ்கோப்’ வெளியாக இருக்கிறது.