அலைச்சறுக்கு வீரரான சிவா, சென்னையில் உணவகம் ஒன்றில் வேலை பார்க்கிறார். ஒரு நாள் கடற்கரையில் ராட்சத உருவத்தில் மயங்கி கிடக்கும் சுமோ தஷிரோவை (யொஷினோரோ தஷிரோ) சிவா மீட்கிறார். பார்ப்பதற்கு வெளிநாட்டவரைப் போல் இருக்கும் அவரை, உணவகத்துக்கு அழைத்து வருகிறார். பழைய ஞாபகங்களை இழந்து விடும் அவரை ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் அவர் ஜப்பானில் மிகப்பெரிய சுமோ விளையாட்டு சாம்பியன் என்பது தெரிய வருகிறது. அவரை மீண்டும் ஜப்பானுக்கு அழைத்துச் செல்ல, சிவா திட்டமிடுகிறார். ஆனால், ஜப்பானில் இருக்கும் ஒரு கும்பல் அவரை ஜப்பானுக்கு வர விடாமல் தடுக்கிறது. அவரை, சிவாவால் ஜப்பானுக்கு அழைத்து செல்ல முடிந்ததா, இல்லையா ? என்பது கதை.
வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள கதைதான். அதை முடிந்தவரை நாயகன் சிவாவுக்கு ஏற்ப நகைச்சுவையாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஹோசிமின். விடிவி கணேஷின் ஃபிளாஷ்பேக்கில் விரியும் கதையில், ராட்சத மனிதன் கதைக்குள் வந்தவுடன் படத்தில் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால், முதல் பாதி வரை அவரை காட்சிப் பொருளாகவும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பது போலவும் காட்டி சோதிக்கிறார்கள். இது திரைக்கதையை நகர்த்திசெல்வதிலும் வேகத்தடையை ஏற்படுத்துகிறது.
ஒரு க்ளூ மூலம் சுமோ தஷிரோ எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை நாயகன் கண்டுபிடிக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில்தான் படம் கதைக்குள் பயணிக்கிறது. ஆனால், சுமோ ஜப்பான் வர விடாமல் தடுக்கும் கும்பல் பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார்கள்.
பாரம்பரிய சுமோ விளையாட்டு வணிகமயமானதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். பார்த்தாலே வெளிநாட்டுக்காரரைப் போல இருப்பவரை போலீஸார் டீல் செய்யும் காட்சி, லாஜிக் இல்லாமல் இருக்கிறது. ஜப்பானில் சிவாவும் விடிவி கணேஷும் செய்யும் ரகளைகள் கலகலப்பூட்டினாலும், வில்லன்களை காமெடியன்கள் போல் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
நாயகன் சிவாவுக்கு இது கச்சிதமான கதை. அதில் பொருந்தி, தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். நாயகியாக வரும் பிரியா ஆனந்த் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். ஜப்பானைச் சேர்ந்த யொஷினோரோ தஷிரோ அழகாகவும் இயல்பாகவும் நடித்து கவர்கிறார்.
விடிவி கணேஷ் அலப்பறை செய்து சிரிக்க வைக்கிறார். தனி டிராக்போல வரும் யோகிபாபு நகைச்சுவை சிரிக்க வைக்க தடுமாறுகின்றன. போலீஸாக வரும் சதிஷ் சிரிப்பு போலீஸா, சீரியஸ் போலீஸா என யோசிக்க வைக்கிறார். நிழல்கள் ரவி, பெசன்ட் ரவி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீநாத் உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர்.
நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை கதைக்கு வலு சேர்க்கிறது. ராஜிவ் மேனனின் ஒளிப்பதிவில் ஜப்பான் அழகாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. பிரவீனின் படத்தொகுப்பு கச்சிதம். திரைக்கதையை நேர்த்தியாக வடிவமைத்திருந்தால், ‘சுமோ’ பிரம்மாண்டமாகத் தெரிந்திருக்கும்.