சுகுமாருக்கு நன்றி என்பது போதுமானது அல்ல என்று அல்லு அர்ஜுன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
உலகளாவில் மாபெரும் வெற்றிப் படமாக மாறியிருக்கிறது ‘புஷ்பா 2’. இந்தியாவில் தயாரான படங்களுள் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது. திரையரங்க பிரச்சினையில் சிக்கியதால் படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது.
இதனிடையே விநியோகஸ்தர்கள், படக்குழுவினர் என அனைவரும் கலந்து கொண்ட நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உருக்கமாக பேசினார் அல்லு அர்ஜுன். தன்னுடன் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு நபரின் பெயரையும் குறிப்பிட்டு பேசி நன்றி தெரிவித்தார்.
இறுதியாக இயக்குநர் சுகுமார் பற்றி பேசும் போது, “சுகுமாருக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், நன்றி என்பது அவருக்கு போதுமானது அல்ல. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சரியான பங்களிப்பைக் கொடுத்தால் மட்டுமே இயக்குநருக்கு வெற்றி கிடைக்கும். ஒரு படத்தின் பாடல் வரிகள், இசை என எதுவாக இருந்தாலும் அது இயக்குநரின் மேற்பார்வையில் தான் இருக்கும். ஆனால், அதன் வெற்றி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தான் செல்லும். அனைத்துக்கும் சுகுமாருக்கு நன்றி” என்று தெரிவித்தார் அல்லு அர்ஜுன்.
இந்த வார்த்தைகளைக் கேட்டு சுகுமார் கண்கலங்கினார். உடனடியாக அல்லு அர்ஜுன் நீங்களும் கண்கலங்கி என்னையும் கண்கலங்க வைக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார். பின்பு அனைவரும் எழுந்து நின்று சுகுமாருக்கு கைதட்டி நன்றி தெரிவித்தார்கள். பின்பு இந்த வெற்றியை எனது ரசிகர்களுக்கு உரித்தாக்குகிறேன். இன்னும் அவர்களை பெருமைப்படுத்துவேன் எனவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் அல்லு அர்ஜுன்.
பின்பு ‘புஷ்பா 3’ குறித்து பேசும் போது, “‘புஷ்பா 3’ குறித்து சுகுமாருக்கும் எனக்குமே தெரியாது. அப்படத்தின் மீது இருக்கும் எனர்ஜியை உணர்கிறேன். ஆனால், அதில் என்ன உள்ளது என்று தெரியாது” என குறிப்பிட்டார் அல்லு அர்ஜுன்.