அனில் ரவிப்புடி இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
தெலுங்கில் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’. உலகளவில் இதுவரை 230 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ‘கேம் சேஞ்சர்’ படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தினை இப்படம் தில் ராஜுவுக்கு ஈடுகட்டிவிடும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இப்படத்தின் இயக்குநர் அனில் ரவிப்புடி தொடர்ச்சியாக 10 வெற்றியினை ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ படத்தின் மூலம் பெற்றுள்ளார். இதனால் அவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. அதில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், சைன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிரஞ்சீவி படம் குறித்த கேள்விக்கு அனில் ரவிப்புடி, “சிரஞ்சீவி உடன் என்னுடைய படம் குறித்து பேசுவது என்பது மிகவும் சீக்கிரம் என்று தோன்றுகிறது. இப்போது கதை உருவாக்கும் பணியில் நாங்கள் பிஸியாக உள்ளோம். அது உங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் விஞ்சும் வகையில் இருக்கும் என்பதை மட்டும்தான் என்னால் இப்போதைக்கு சொல்ல முடியும். என்னால முடிந்த அளவுக்கு சிரஞ்சீவியை சிறப்பான முறையில் காட்ட முயற்சி செய்வேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிரஞ்சீவி – அனில் ரவிப்புடி இணைவது உறுதியாகிவிட்டது.