சினிமா மரபுகளை உடைத்து முழுவதும் கிராமத்து மனிதர்களை நடிக்க வைத்து உருவான ‘வெங்காயம்’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இவர் அடுத்து இயக்கியிருக்கும் படம், ‘பயாஸ்கோப்’. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இந்தப் படம் ஜன. 3-ல் வெளியாகிறது. ‘‘வெங்காயம் படம் எப்படி உருவானது என்பதை சொல்லும் படம்தான் இது” என்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
எப்படி?
சினிமா பற்றி எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் சேர்ந்து ஒரு படத்தை எப்படி எடுத்தாங்க அப்படிங்கறதுதான் கதை. நான் ‘வெங்காயம்’ படத்தை என் சொந்த ஊர்ல எடுத்தேன். அப்ப எனக்கு நடந்த நகைச்சுவையான அனுபவங்களை திரும்பவும் ஒரு படமா உருவாக்கி இருக்கி றேன். ஏற்கெனவே எடுத்து ரிலீஸான படம், எப்படி எடுக்கப்பட்டதுன்னு ஒரு படமாக உருவாகுறது, தமிழ்ல இதுதான் முதல் முறை.
‘மேக்கிங் வீடியோ’ மாதிரியா?
ஒரு படம் உருவாகும்போது அதை எப்படி எடுத்தோம்னு அப்பவே எடுக்கிறது மேக்கிங் வீடியோ. இது அப்படியில்லை. அந்த சம்பவங்களை வச்சுகிட்டு ஒரு கதை ரெடி பண்ணி அதை படமாக்கி இருக்கேன். அந்த சம்பவங்கள்ல நகைச்சுவை, வில்லத்தனம் எல்லாமே இருந்தது. ஒரு சினிமாவுக்கான அனைத்து விஷயமும் அமைஞ்சது. ‘வெங்காயம்’ படத்தோட உருவாக்கத்துல பங்கெடுத்துக்கிட்ட கிராமத்துக்காரங்கதான் இதுல நடிச்சிருக்காங்க. சினிமா பற்றி எதுவுமே தெரியாதவங்க சினிமா எடுத்தா எப்படி இருக்கும்? அதுதான் கதை. ‘டிராலி’ன்னு சொன்னா அவங்களுக்கு ‘தாலி’ன்னு கேட்கும். ‘தெர்மாகோல்’ அப்படின்னா ‘பெருமாள் கோயில்’னு புரிஞ்சுக்கிடுவாங்க. இப்படி படம் முழுவதும் சிரிச்சுக்கிட்டே இருக்கலாம்.
படத்துல நடிச்சவங்க எல்லோருமே புதுசுதானா?
உண்மை கதை அப்படிங்கறதால, வில்லன் தவிர, இதுல வர்றவங்க நிஜ கதாபாத்திரங்கள்தான். தீபாவளி, பொங்கல், திருமணங்கள்ல ஒரு குடும்பமா சேர்ந்து எப்படி இருப்போமோ, அப்படித்தான் இந்தப் படத்தைப் பண்ணியிருக்கோம். இதுல காமெடி எவ்வளவு இருக்கோ, அதே மாதிரி எமோஷனும் இருக்கும். நடிச்ச எல்லோருமே படத்தை பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இதுல சேரன், சத்யராஜ் கவுரவ வேடத்துல நடிச்சிருக்காங்க.
இந்த ஐடியா எப்படி உருவாச்சு?
ஒரு சேனல்ல ‘வெங்காயம்’ பட புரமோஷன் நடந்தது. படத்துல நடிச்சவங்க அதுல கலந்துகிட்டு தங்கள் அனுபவங்களைச் சொன்னாங்க. அப்ப இயக்குநர் மிஷ்கின், ‘இதுல பேசிய விஷங்களை வச்சே, ஒரு படமோ, ஆவணப் படமோ பண்ணலாம்’னு சொன்னார். அதுக்குப் பிறகுதான், அதை நாமே பண்ணலாமேன்னு எனக்கு தோணுச்சு. அப்படித்தான் இந்த ஐடியா வந்துச்சு.
தாஜ்நூர் இசை அமைச்சிருக்கார். பாடல்கள் எப்படி?
3 பாடல்கள். ‘வட்ட வட்ட பொட்டு வச்சு’ங்கற கும்மி பாடலை, அப்படியே சினிமாவில் பயன்படுத்துற வார்த்தைகளை வச்சு மாத்தி அமைச்சிருக்கோம். அதாவது ஒரு டைரக்டர் சினிமா வகுப்பு நடத்தினா எப்படி இருக்குமோ, அப்படியிருக்கும் இந்தப் பாடல். அதே போல பின்னணி இசையும் அவருக்கு சவாலாகத்தான் இருந்தது. அருமையா பண்ணியிருக்கார்.
நீங்க ஏற்கெனவே ‘ஒன்’ அப்படிங்கற படத்தை எடுத்தீங்களே?
அந்தப்படம் முடிஞ்சிருச்சு. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, கலை, காஸ்ட்யூம், எடிட்டிங், டப்பிங், இசைன்னு ஒரு படம் உருவாக தேவையான அனைத்து துறை வேலைகளையும் தனி ஒருவனா, நானே செஞ்சு முடிச்சிருக்கேன். பிப்ரவரியில ரிலீஸ் ஆகும்.