கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமாரின் கருத்துகளுக்கு அவரை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகர் விநாயகன்.
சமீபத்தில் மலையாள திரையுலகில் இருந்து வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சுரேஷ் குமார். இவர் பிரபல தயாரிப்பாளர் மட்டுமன்றி முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷின் தந்தை ஆவார். இவருடைய பேட்டிதான் தற்போது கேரளாவில் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.
சுரேஷ் குமார் அளித்த பேட்டியில் நடிகர்களின் சம்பளம், தயாரிப்பாளர்களின் நிலை, படங்களின் தோல்வி உள்ளிட்ட பல விஷயங்களை பேசினார். மேலும், படத்தின் போஸ்டர்களில் போடப்படும் வசூல் நிலவரம் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைத்தார். நடிகர்களே தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது ஆபத்தானது எனவும் கூறியிருக்கிறார். முன்னணி தயாரிப்பாளர் மற்றும் சங்கப் பொறுப்பில் இருப்பவர் என்பதால் சுரேஷ் குமாரின் பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சுரேஷ் குமார் பேச்சு குறித்து விநாயகன், “சினிமா உங்கள் குடும்ப சொத்தா? நீங்கள் உங்கள் மனைவியிடமும், குழந்தைகளிடமும் படங்களில் நடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். நான் ஒரு திரைப்பட நடிகன். நான் விரும்பினால் படங்களை தயாரிக்கவும், இயக்கவும், விநியோகிக்கவும், திரையிடவும் முடியும். இது இந்தியா. ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.