பிரபல பாடகர் தம்பதிகளான திப்பு – ஹரிணியின் மகன் தான் சாய் அபியங்கர். இவர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ‘கட்சி சேர’ என்னும் பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டிருந்தார். இப்பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து, ‘ஆசை கூட’ என்னும் பாடலை வெளியிட்டார். அதுவும் இணையத்தில் வைரலானது.
இந்த வரிசையில், அவர் இசையமைத்த ‘சித்திர புத்திரி’ என்னும் புதிய பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்தப் பாடலில் நடிகை மீனாட்சி சவுத்ரி நடனமாடியுள்ளார். மன்னர் ஒருவர் ஒரு தீவில் மறைத்து வைத்துள்ள ஒரு பொருளை பலர் அடைய முயற்சிக்கின்றனர். அதை சாய் அபியங்கரும் தேடி போவது போல அமைந்துள்ளது இப்பாடல். ‘இல்ல இல்ல அந்த பொம்ம பிள்ள போல யாரும் இல்ல’ போன்ற வரிகளுடன் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது இப்பாடல்.
சாய் அபியங்கர் இசையமைத்த பாடல்கள் தொடர்ந்து ஹிட்டடித்து வருவதால், அவருக்கு வெள்ளித்திரையில் அறிமுகமாகும் வாய்ப்பு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தின் மூலம் கிடைத்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவிருந்த இப்படம் தற்போது சாய் அபியங்கரின் வசம் உள்ளது. சாய் அபியங்கர் எவ்வாறு இப்படத்துக்கு இசையமைக்க போகிறார் என்று எண்ணிக் கொண்டிருந்த சூர்யா ரசிகர்கள், தற்போது வெளியான பாடலை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இது தவிர, ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்துக்கு இவர் இசையமைக்க உள்ளார்.