சென்னை: வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை முன்வைத்து சமூக வலைதளங்களில் கடும் விவாதம் கிளம்பியுள்ளது.
இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் ‘பேட் கேர்ள்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை புதுமுகம் வர்ஷா பாரதி இயக்கியுள்ளார். அஞ்சலி சிவராமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஞாயிறு அன்று வெளியானது.
டீன் ஏஜ் பெண் ஒருவர் தனக்கு பாய்ஃப்ரெண்ட் வேண்டும் என்ற விருப்பத்தை சொல்வதுடன் டீசர் தொடங்குகிறது. தொடர்ந்து அப்பெண்ணின் குடும்பம், காதல், முதல் முத்தம், பள்ளிக்கு பிந்தைய வாழ்க்கை, தனது தேவைகளை புரிந்து கொள்ளுதல் என டீசர் அடுத்தடுத்து காட்சித் துணுக்குகளை கண்முன்னே நிறுத்துகிறது. இப்படம் ரோட்டர்டாமில் நடக்க உள்ள 54வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
இந்த டீசரை தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்திருந்த இயக்குநர் பா.ரஞ்சித், “பேட் கேர்ள் படத்தைப் பார்க்க நேர்ந்தது. இது உண்மையிலேயே ஒரு துணிச்சலான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம். இவ்வளவு துணிச்சலான கதையை தயாரித்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்தப் படம் பெண்களின் போராட்டங்களையும் சமூக எதிர்பார்ப்புகளையும் ஒரு தனித்துவமான புதிய அலை சினிமா பாணி மூலம் சக்தி வாய்ந்த முறையில் சித்தரிக்கிறது. வாழ்த்துகள், வர்ஷா” என்று பாராட்டியிருந்தார்.
ரஞ்சித்தின் இந்த பதிவை ரீட்வீட் செய்த இயக்குநர் மோகன் ஜி, “ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த கும்பலுக்கு எப்போதும் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படமாக இருக்கும். வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் ஆகியோரிடமிருந்து வேறு என்ன எதிர்பார்ப்பது? பிராமண அப்பா அம்மாவை பழிவாங்குவது ட்ரெண்ட் அல்ல. உங்கள் சாதியில் உள்ள பெண்களை வைத்து இது போன்ற படங்களை இயக்கி, உங்கள் குடும்பத்தாரிடம் காட்டுங்கள்” என்று விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து இந்த டீசரை முன்வைத்து கடும் விவாதம் சமூக வலைதளங்களில் கிளம்பியது. தொடர்ந்து பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தி படமெடுப்பது இப்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது என்று ஒரு தரப்பினரும், டீசருக்கு ஆதரவாக இன்னொரு தரப்பினரும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பேட் கேர்ள் டீசர் வீடியோ: