மும்பை: நடிகர் சயிப் அலி கானை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகரான சயிப் அலிகான் (54), மகாராஷ்டிர மாநிலம் மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். 11-வது தளத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த புதன்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்து கத்தியால் 6 முறை நடிகர் சயிப் அலி கானை குத்தினார். இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) வைக்கப்பட்டிருந்தார். அபாய கட்டத்தைத் தாண்டிய நிலையில் நேற்று, அவர் ஐசியு பிரிவிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
லீலாவதி மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி நீரஜ் உத்தமணி கூறும்போது, “சயிப் அலி கான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அந்தக் கத்தி அவரது முதுகில் இன்னும் 2 மில்லி மீட்டர் ஆழத்துக்குச் சென்றிருந்தால் விளைவுகள் மோசமாக இருந்திருக்கும். அது அவருக்கு மிகவும் மோசமான காயத்தை ஏற் படுத்தி இருக்கும்” என்றார்.
இந்நிலையில், நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய வாரிஸ் அலி சல்மானியை மும்பை பாந்த்ரா போலீஸார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சயிப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்த திருடன், சயிப் அலி கானின் பணியாளர்களிடம் ரூ.1 கோடி கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சயிப் அலி கானின் மகன் ஜெ தூங்கிக் கொண்டிருந்த படுக்கை அறைக்குள் மர்ம நபர் நுழைந்தார்.
பின்னர் அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரை கன்னத்தில் அறைந்த அந்த மர்ம நபர், அவரிடமும் ரூ.1 கோடி கேட்டுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு மணிக்கட்டு, கைகளில்காயம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்ட பின்னர்தான் தூங்கிக் கொண்டிருந்த சயிப் அலி கான் வெளியே வந்துள்ளார். பின்னர் மர்மநபருடன் கைகலப்பு ஏற்பட்டு, அவருக்குக் கத்திக்குத்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.