முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் வன்முறைகள் நிறைந்த ‘மார்கோ’ படம் குறித்து குறிப்பிட்டுள்ள நடிகர் உன்னி முகுந்தன், “சமூகத்தில் நடப்பதில் 10%-ஐ கூட ‘மார்கோ’வில் காட்டவில்லை” என்று கூறியுள்ளார்.
2024-ம் ஆண்டு இறுதியில் மலையாளத்தில் வெளியாகி இந்தியளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மார்கோ’. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தாலும், இதில் இடம்பெற்ற வன்முறைக் காட்சிகள் பெரும் சர்ச்சையையும் உருவாக்கியது. தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.
ஓடிடி தளத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் உன்னி முகுந்தன் அளித்த பேட்டி ஒன்றில், “வன்முறை என்பது நமது வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருக்கிறது. அதை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், ‘மார்கோ’ படத்தில் சமூகத்தில் நடப்பதை 10% கூட காட்டவில்லை. மனித வளர்ச்சியின் ஒரு பகுதியாக வன்முறை இருப்பதை நம்புகிறேன். நாம் போர்களின் மூலமே சமாதானத்தை அடைந்தோம். அது மனிதனின் இயற்கை. அறிவியல் நமக்கு இதை கற்று தந்தது.
இவை அனைத்தும் நான் சொல்வது திரையில் இருக்கும் வன்முறையை விற்பதற்காக அல்ல. இது நம் சமூகத்தில் நம்மைச் சுற்றியும் வன்முறை இருக்கிறது என்று கூறுகிறேன். என் வாழ்க்கையில் நேரடியாக வன்முறையை காணாமல் இருப்பதற்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
ஒரு பெரிய சமூகமானது வன்முறையால் பல்வேறு வடிவங்களில் பாதிக்கப்படுகிறது. ஒரு பெரும் சமூகமே ஏராளமான வன்முறையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் வன்முறையை காணவில்லை என்றால், அது இல்லை என்று அர்த்தம் கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஓடிடி வெளியீட்டில் அதிக காட்சிகள் இருக்கும் என்று படக்குழு கூறியிருந்தது. ஆனால், அதற்கு அனுமதி கிடைக்காத காரணத்தினால் திரையரங்குகளில் வெளியான படத்தில் என்ன இருந்ததோ, அதுவே ஓடிடியிலும் இடம்பெறும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்தப் படம் முழுவதும் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் சில தரப்பினர் இப்படத்தை பார்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனினும், இந்த அதிரடியான ஆக்ஷன் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்தது கவனிக்கத்தக்கது.