சென்னை: சச்சின் படத்தில் ஜெனிலியாவின் தோழியாக வரும் நடிகை ரஷ்மி வெளியிட்டுள்ள இன்ஸ்டா வீிடியோவில், “இந்தப் படத்தில் நடித்த என்னை அடையாளம் கண்டு, பாராட்டுத் தெரிவிக்கும் ரசிகர்களின் வாழ்த்து அலை போல் வருகிறது. அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 18-ம் தேதி விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஜெனிலியாவின் தோழியாக நடிகை ரஷ்மி என்பவர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வரும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் அண்மையில் வைரலானது. இதைத் தொடர்ந்து இன்ஸ்டா வீடியோ ஒன்றை ரஷ்மி வெளியிட்டுள்ளார். அதில் “நான் இந்த ரீல்ஸைப் பதிவிடுவதற்கு காரணம், கடந்த இரண்டு நாட்களாக பலரும் என்னை நினைவுகூர்கின்றனர். அதேநேரம், இயக்குநர் ஜான் இயக்கத்தில், நடிகர் விஜய், நடிகைகள் ஜெனிலியா பிபாஷா பாஷு உள்ளிட்டோர் நடித்த சச்சின் படத்தின் மறுவெளியீட்டைக் கொண்டாடி வருகிறோம்.
உங்களில் பலரும் இந்தப் படத்தை தியேட்டருக்குச் சென்று மீண்டும் பார்த்து, ஏராளமான அன்பைக் கொடுத்து வருகிறீர்கள். அந்தப் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த என்னை நீங்கள் கண்டுபிடித்து, பெரிதுபடுத்தி என்னைப் பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. என்னைப் போன்றவர்கள் வெளியே வருவதற்கான மிகப் பெரிய உந்துசக்தியை உங்களது பாராட்டுக் கொடுக்கிறது. அதற்காக, எனது உளப்பூர்வமான நன்றியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சச்சின் படத்தில் நான் நடித்திருந்த ஸ்மிருதி கதாப்பாத்திரம் எழுதப்பட்டிருந்த விதம்தான், உங்கள் அனைவரிடமும் என்னைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று நம்புகிறேன். உண்மையான நட்புக்கு இடையில் இருக்கும் எளிமை, நட்புக்காக எப்போதும் துணை நிற்பதைு, சரியானதை தேர்வு செய்ய உதவியாக இருப்பது என ஸ்மிருதி பாத்திரம் அந்தப் படத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடித்ததைப் பெருமையாக கருதுகிறேன்.
உண்மையைச் சொன்னால், அந்தப் படத்தில் வரும் ஸ்மிருதி கதாப்பாத்திரம் போலத்தான், நான் என்னுடைய நண்பர்களோடு நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறேன். நீங்களும்கூட அப்படித்தான் உங்களுடைய நண்பர்களோடு இருந்திருப்பீர்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்போது எனக்கு 20 வயது. நான் ரொம்ப சின்னப்பொண்ணு. கல்லூரியில் அப்போது படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. நானும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
ஆனால், இப்போது அந்த பழைய நினைவுகளை எல்லாம் மீண்டும் நினைவுகூர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அலைபோல் உங்களது வாழ்த்துகள் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக, பிரசாந்த் என்பவர், சச்சின் படத்தில் நான் வரும் இடங்களை மட்டும் எடுத்து, ரீல்ஸ் போட்டு வைரலாக்கிவிட்டார். என்னுடைய நண்பர்கள் பலரும் அதை எனக்கு பகிர்ந்திருந்தனர். அதை நான் மனதாரப் பாராட்டுகிறேன். அனைவருக்கும் ரொம்ப நன்றி,” என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.