30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்த ஷங்கர், முதல் முறையாக நேரடியாக தெலுங்கில் இயக்கியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. ‘இந்தியன் 2’ கொடுத்த மிகப் பெரிய தோல்வியால் வெற்றியின் கட்டாயத்தில் ஷங்கரும், ‘ஆர்ஆர்ஆர்’ பெற்ற உலகளாவிய கவனத்துக்குப் பிறகு ‘சோலோ’வாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ராம் சரணும் இணைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டார்களா என்பதை பார்ப்போம்.
எதிலும் நேர்மை, எங்கும் துணிச்சல் என்று செயல்படும் ஓர் அரசு அதிகாரியும், எங்கும் எதிலும் ஊழல் என்று செயல்படும் ஓர் அரசியல்வாதியும் மோதிக் கொண்டால் என்ன ஆகும் என்பதே ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஒருவரிக் கதை. ஐபிஎஸ் ஆக இருந்து ஐஏஎஸ் அதிகாரியாகி இருக்கும் ராம் நந்தன் (ராம்சரண்) விசாகப்பட்டினத்துக்கு மாவட்ட ஆட்சியராக வருகிறார். வந்த உடனே தனது அதிரடியான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இதனால் முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான மோப்பிதேவி (எஸ்.ஜே.சூர்யா) உடன் ஆட்சியர் ராம் நந்தனுக்கு மோதலை ஏற்படுத்துகிறது.
தனது தந்தை ஒப்பிலி சத்யமூர்த்தி (ஸ்ரீகாந்த்) இறந்த பிறகு முதல்வர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மோப்பிதேவிக்கு ஹீரோவால் பல சிக்கல்கள் எழுகின்றன. இருவருக்கும் இடையிலான இந்த எலி – பூனை விளையாட்டில் ஆட்டத்தை மாற்றியது யார் என்பதற்கு படத்தின் திரைக்கதை பதில் சொல்கிறது.
தமிழ் சினிமா மட்டும் மட்டுமின்றி இந்திய சினிமாவையே தனது ‘முதல்வன்’ என்கிற அரசியல் படத்தால் திரும்பி பார்க்க வைத்த ஷங்கரிடமிருந்து மீண்டும் ஓர் அரசியல் படம் என்ற அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தனது வழக்கமான டிரேக்மார்க் அம்சங்களுடன் ‘தெலுங்கு மசாலா’ என்ற புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். ஆனால், அது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கைகொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
பொதுவாகவே ஷங்கர் தனது படங்களில் பல்வேறு புதுமையான விஷயங்களை புகுத்தியிருப்பார். கதைக்கு தேவையே இல்லாத பிரம்மாண்ட செட் பாடல்களை தாண்டி, படத்தின் திரைக்கதை ஆடியன்ஸ் யூகிக்க முடியாத அளவுக்கு தனித்து நிற்கும். ஆனால் ‘கேம் சேஞ்சர்’ அப்படியான எந்த புதுமைகளும் இல்லாமல் எளிதில் யூகிக்க கூடிய தட்டையான திரைக்கதையுடன் நகர்கிறது. பாடல்களில் மட்டுமே ஷங்கரின் ‘சிக்னேச்சர்’ பாணியை பார்க்க முடிகிறது.
எனினும், படம் எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதல். அதே வழக்கமான ஹீரோ இன்ட்ரோ, அதே அறிமுகப் பாடல், அதே குடும்ப காட்சிகள் என்று தொடங்கும் முதல் பாதியில் ’பிளாஸ்டிக்’ தனமான காதல் காட்சிகளை தவிர எஸ்.ஜே.சூர்யா, ராம்சரண் தொடர்பான காட்சிகள் அடுத்தடுத்து நகரும்படியே எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இடைவேளைக்கு முந்தைய காட்சி அப்பட்டமான லாஜிக் மீறல் என்றாலும், அதை படமாக்கிய விதம் சிறப்பு. ஷங்கர் படங்களில் வரும் ‘ஷார்ப்’ வசனங்கள் இதில் மிஸ்ஸிங். நினைவில் வைத்துக் கொள்ளும்படி அவை எந்த இடத்திலும் ஈர்க்கவில்லை.
ஹீரோவாக ராம்சரண் கதாபாத்திரத்துக்கு நல்ல தேர்வு. இரண்டு விதமான கெட்-அப்களிலும் வித்தியாசம் காட்டி கவர்கிறார். குறிப்பாக, இரண்டாம் பாதியில் வரும் சுப்பண்ணா கதாபாத்திரம் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தரும். பெரும்பாலான ஷங்கர் பட நாயகிகளைப் போலவே இதிலும் கியாராவுக்கு பாடல் காட்சிகளைத் தவிர பெரிய வேலை எதுவும் இல்லை. எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் முழு மேக்கப் உடன் வந்து செல்கிறார். அஞ்சலி தனது வேலை குறையின்றி செய்திருக்கிறார். வில்லன் கேரக்டர் என்றாலே அல்வா சாப்பிடுவது போல அமர்க்களப்படுத்தும் எஸ்.ஜே.சூர்யா இதிலும் ஸ்கோர் செய்கிறார். சுனில், வெண்ணெலா கிஷோர் இருவரும் காமெடி என்ற பெயரில் ஏதோ முயற்சி செய்துள்ளனர்.
படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் என்றால் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக்கும், அதில் இடம்பெற்ற சுப்பண்ணா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும்தான். அதில் ஹீரோயிசத்தை குறைத்து தனது தேர்ந்த நடிப்பால் ராம்சரண் வெகுவாக கவர்கிறார். கிட்டத்தட்ட 25 நிமிடம் ஓடும் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சியே இரண்டாம் பாதியை பெரிதும் தூக்கி நிறுத்துகிறது. எனினும் அந்த ஃப்ளாஷ்பேக்குக்குப் பிறகு படம் மீண்டும் பக்கா தெலுங்கு மசாலா பாணிக்கு திரும்பி ஒருவழியாக முடிகிறது.
ஓர் அரசு அதிகாரியின் ஆற்றல் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாத பல தகவல்கள் படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன என்றாலும், ஐஏஎஸ் அதிகாரி ஒரே இரவில் மிகப் பெரிய பொறுப்புகளுக்குப் பாய்வது நிஜத்துக்கு அருகில் கூட வராத அப்பட்டமான லாஜிக் மீறல்கள் படம் முழுக்க ஆக்கிரமித்துள்ளன. இது ஷங்கர் படம் தானா என்ற ஐயம் படம் முழுக்க எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த இடத்தில்தான் ஷங்கர் பெரிதும் சறுக்கியுள்ளதாக தோன்றுகிறது.
படத்தின் பின்னணி இசையில் தமன் கவனம் ஈர்க்கிறார். பாடல்கள் ஓகே ரகம். இந்த இடத்தில் ஷங்கரின் ஆஸ்தான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜை மிஸ் செய்யாமல் இருக்கமுடியவில்லை. திருவின் கேமரா ஷங்கர் பட பிரம்மாண்டத்தை காட்ட தவறவில்லை. ஒவ்வொரு பிரேமிலும் படக்குழுவினரின் உழைப்பும், செலவும் தெரிகிறது.
ஷங்கரின் முந்தைய படம் தந்த மிகப் பெரிய ஏமாற்றத்துடன் ஒப்பிடும்போது இப்படம் பரவாயில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ‘ஷங்கர் படம்’ என்று இதுநாள் வரை அமைக்கப்பட்டிருந்த ஒரு இமேஜ் உடன் ஒப்பிட்டால் ‘கேம் சேஞ்சர்’ ஒரு சராசரி தெலுங்கு மசாலா படம் மட்டுமே!