‘கேம் சேஞ்சர்’ படத்தில் சின்ன கதாபாத்திரம்தான் என்று தெரிந்தே நடித்தேன் என ப்ரியதர்ஷி தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ப்ரியதர்ஷி. நாயகனாக நடித்து வரும் நிலையில், எப்படி இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்தார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது நானி தயாரித்துள்ள ‘கோர்ட்’ படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இதனை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்தது குறித்து பேசியிருக்கிறார் ப்ரியதர்ஷி.
அதில் “‘பாலகம்’ படத்துக்கு முன்பு ஒப்புக் கொண்ட படம் ‘கேம் சேஞ்சர்’. அப்போது நாயகனின் நண்பனாக பல படங்களில் நடித்து வந்தேன். அப்படத்துக்காக 25 நாட்கள் நடித்தேன். ஆனால், படத்தில் 2 நிமிடங்கள் கூட என் காட்சிகள் இல்லை. அனைத்தையும் எடிட்டிங்கில் தூக்கிவிட்டார்கள்.
‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு தொடங்கும் போதே அந்தக் கதாபாத்திரம் சிறியதுதான் என தெரியும். ஆகையால், அதில் எனக்கு வருத்தமில்லை. இயக்குநர் ஷங்கர், ராம்சரண், ஒளிப்பதிவாளர் திரு ஆகியோர் இணையும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தததால் நடித்தேன்” என்று ப்ரியதர்ஷி தெரிவித்துள்ளார்.
தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது. கடுமையான விமர்சனங்களைப் பெற்றாலும், மக்கள் மத்தியில் இப்படம் பெரும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.