‘கேம் கேஞ்சர்’ மதுரையில் நடந்த உண்மைக் கதை என்று எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ராக் போர்ட் நிறுவனம் ‘கேம் சேஞ்சர்’ படத்தினை வெளியிடுகிறது. இதனை விளம்பரப்படுத்த வீடியோ பதிவு ஒன்றைக் கொடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அதில், “இதுவரை என்னுடைய படத்துக்கு பெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளீர்கள். தற்போது ஷங்கர் சாருடைய இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் சார், கைரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் சார் உள்ளிட்டோருடன் நடித்துள்ளேன். பெரும் பொருட்செலவில் தில் ராஜு சார் தயாரித்திருக்கிறார்.
எனது முந்தைய படங்களுக்கு கொடுத்த ஆதரவை போன்று இதற்கும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதன் கதையினை கார்த்திக் சுப்புராஜ் சார் மதுரையில் உள்ள ஒரு கலெக்டரின் வாழ்க்கையில் இருந்து எடுத்து ஆந்திராவில் நடக்கும் கதையாக எழுதியிருக்கிறார். ஷங்கர் சாருக்கு ஏற்றதொரு கதை என்பதால் பிரம்மாண்டமாக செய்திருக்கிறார்கள். திருவின் ஒளிப்பதிவு, பிரபுதேவா, ஜானி மாஸ்டர்களின் நடனம், தமனின் இசை என அனைத்துமே நன்றாக வந்துள்ளது.
தமிழ், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. எனக்கு ரொம்ப கதை பிடித்துப் போய் சிறப்பான முறையில் செய்திருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். மதுரையில் ஒரு கலெக்டருக்கும், அரசியல் வாதிக்கும் நடந்த உண்மை சம்பவம் தான் கதை. நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட படமாக வந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
இதன் மூலம் ‘கேம் சேஞ்சர்’ ஒரு உண்மைச் சம்பவத்தை பின்புலமாக கொண்டு எடுத்துள்ளது உறுதியாகி இருக்கிறது. அவர் யார் என்பதை விரைவில் படக்குழு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.