’மாமன்னன்’ படத்தில் தனது சீரியசான கதாபாத்திரம் பெற்றுத் தந்த நல்ல வரவேற்புக்குப் பிறகு வடிவேலு காமெடியனாக நடித்த ‘சந்திரமுகி 2’ பெரியளவில் பேசப்படவில்லை. 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு முழுமையான காமெடி ரோலில் மீண்டும் வடிவேலு களமிறங்கியுள்ள படம்தான் ‘கேங்கர்ஸ்’. இன்னொருபுறம் ‘மதகஜராஜா’ வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்குநராக களமிறங்கியுள்ள இப்படம் ‘வின்னர்’, ‘லண்டன்’, ‘கிரி’ படங்களில் இருந்த சுந்தர்.சி – வடிவேலு மேஜிக்கை திரும்ப கொண்டு வந்ததா என்று பார்க்கலாம்.
அரசன்கோட்டை என்னும் ஊரில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி திடீரென காணமல் போகிறார். அதே பள்ளி ஆசிரியயையாக பணிபுரியும் சுஜி (கேதரீன் தெரசா) மாணவி குறித்தும், அப்பள்ளியின் தாளாளர்கள் (மைம் கோபி, அருள்தாஸ்) செய்யும் சட்டவிரோத தொழில்கள் குறித்தும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் செய்கிறார். இதனையடுத்து அந்தப் பள்ளிக்கு ஆசிரியராக ஒரு போலீஸார் அண்டர்கவர் ஆபரேஷனுக்கு அனுப்பப்படுகிறார்.
அதே பள்ளிக்கு புதிய பி.டி.மாஸ்டராக வருகிறார் சரவணன் (சுந்தர்.சி). அங்கு வேலை செய்யும் மற்றொரு பி.டி.மாஸ்டர் சிங்காரமும் (வடிவேலு), கணக்கு வாத்தியாரும் அவருக்கு நட்பாகின்றனர். வில்லன்களால் நாயகிக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தொடர்ந்து மாறுவேடத்தில் வில்லன் ஆட்களை அடித்து துவம்சம் செய்கிறார் ஹீரோ. ஹீரோவின் நோக்கம் என்ன, காணாமல் போன மாணவிக்கு என்ன ஆனது என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கேங்கர்ஸ்’ திரைக்கதை.
தனது படங்கள் யாருக்கானவை? அவை யாரை திருப்திப்படுத்த வேண்டும்? எதை எல்லாம் வைத்தால் அவர்கள் ரசிப்பார்கள்? – இதுபோன்ற விஷயங்களை மிகத் தெளிவாக தெரிந்து படமெடுப்பவர் சுந்தர்.சி. அதே ஃபார்முலாவை இந்த படத்தில் கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார். முதல் பாதியைப் பொறுத்தவரை கதாபாத்திரங்களின் அறிமுகம், வில்லன்களின் பின்னணி, அவர்களுக்கும் ஹீரோ ‘கேங்’-க்குமான மோதல் என போரடிக்காமல் செல்கிறது. ஆனால், நகைச்சுவையை பொறுத்தவரை ஓரிரு இடங்கள் தவிர பெரிதாக எடுபடவில்லை.
ஆனால், இரண்டாம் பாதியில் படம் கிட்டத்தட்ட ஒரு லோ- பட்ஜெட் ‘மணி ஹெய்ஸ்ட்’ பாணிக்கு மாறியபிறகு பெரும்பாலான காமெடி காட்சிகள் சரவெடி ரகம். குறிப்பாக வில்லனின் வீட்டில் வடிவேலு – சுந்தர்.சி நுழையும் இடம், ‘சார்லஸ்’ என்ற கேரக்டரில் மாறுவேடத்தில் வடிவேலு வில்லன் வீட்டுக்கு செல்லும் இடம், க்ளைமாக்ஸுக்கு முன்பாக பெண் வேடத்தில் வடிவேலு செய்யும் அலப்பறை என பல நகைச்சுவை காட்சிகள் கைகொடுத்திருக்கின்றன. இதுவே இப்படத்தை காப்பாற்றவும் செய்திருக்கின்றன. வெறும் நகைச்சுவை மட்டும் இல்லாமல், லாஜிக் மீறல்களை தாண்டி இரண்டாம் பாதி திரைக்கதையை சுவாரஸ்யமாகவே அமைத்திருக்கிறார் இயக்குநர்.
ஹீரோவாக சுந்தர்.சி தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து அதற்கு வேண்டியதை சரியாக செய்திருக்கிறார். காமெடியனாக வடிவேலுவின் கம்பேக் என்று இப்படத்தை தாராளமாக சொல்லலாம். வயதாவதற்கான அறிகுறிகள் முகத்தில் தெரிந்தாலும் வழக்கம்போல தனது அசாதாரண உடல்மொழியால் அசத்துகிறார்.
வழக்கமாக சுந்தர்.சி படங்களில் ஹீரோயின்கள் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படும் வழக்கத்தை அவரே இதில் உடைத்து கேதரீன் தெரசாவுக்கு படத்தில் ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தை கொடுத்திருப்பது நல்ல முன்னேற்றம். எனினும், இரண்டாம் பாதியில் வரும் அந்த பார் பாடலை தவிர்த்திருக்கலாம். வாணி போஜன் ஒரு சில நிமிடங்கள் வந்தாலும் நல்ல நடிப்பை தந்திருக்கிறார். முனீஷ்காந்த், பகவதி பெருமாள், சந்தான பாரதி, அருள்தாஸ், மைம் கோபி, காளையன் என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை குறையின்றி செய்திருக்கின்றனர்.
இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு கொள்ளைக் காட்சிகளில் படத்துக்கு உயிரூட்டி இருக்கிறது. சத்யா.சி-யின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்.
முதல் பாதியில் நகைச்சுவை காட்சிகள் எடுபடவில்லை என்பதால் கதையும் மிக மெதுவாக நகர்வது போல தோன்றுகிறது. அதேபோல யூகிக்கத்தக்க, அழுத்தமில்லாத காட்சிகள் பலவும் ஆங்காங்கே வருவது படத்தின் மைனஸ்களில் ஒன்று. ஸ்கூல் பையன் எப்படி கார் ஓட்டிக் கொண்டு பள்ளிக்கு வருவான், அவனையும் நம்பி எப்படி டீச்சர் ஏறிச் செல்கிறார்? ரூ.100 கோடி பணத்தை ஒரு மினிஸ்டர் வெறும் 2 பேரை மட்டுமே நம்பி ஒரு லாரியில் வைத்து அனுப்புவாரா? – இதுபோன்ற கேள்விகள் சிறு பிள்ளைகளுக்கு கூட எழும் அளவுக்கான பலவீனமாக காட்சியமைப்புகள்.
இத்தனையும் இருந்தாலும் இரண்டாம் பாதியில் வரும் நகைச்சுவை காட்சிகள் இதுபோன்ற அப்பட்டமான லாஜிக் மீறல்களை மறக்கடித்து விடுகின்றன. தியேட்டர் தொடர்பான காட்சிகளில் ‘மதகஜராஜா’ படத்தின் ரெஃபெரன்ஸ் பயன்படுத்தப்பட்ட விதம் சிறப்பு. குறிப்பாக, விஷாலுக்கு வைக்கப்பட்ட ஒரு ‘குறியீடு’ பட்டாசு ரகம்.
சுந்தர்.சி – வடிவேலு கூட்டணியின் முந்தைய படங்களில் இருந்த மேஜிக் இந்தப் படத்தில் நிகழ்ந்திருக்கிறதா என்றால், நிச்சயம் ‘ஆம்’ என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், அது படத்தின் இரண்டாம் பாதியில் மட்டுமே. அதற்கு ஒரு சுமாரான முதல் பாதியை நீங்கள் கடந்தாக வேண்டும். இரண்டாம் பாதியில் இருந்த சுவாரஸ்யமும், காமெடியும் முதல் பாதியிலும் இருந்திருந்தால் இப்படம் இன்னும் பேசப்பட்டிருக்கும். எனினும், நாம் பார்க்கப் போவது சுந்தர்.சி படம் என்பதை மனதில் கொண்டு எந்த லாஜிக்கையும் பற்றி யோசிக்காமல் சென்று பார்த்தால் ஒரு கலகலப்பான ‘என்டர்டெய்னர்’ உறுதி.