‘கூலி’ படத்தில் நடிப்பதாக வெளியான செய்திக்கு சந்தீப் கிஷன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பாக, ‘கூலி’ படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதி செய்யும் விதமாக ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார் சந்தீப் கிஷன். இதனைத் தொடர்ந்து உண்மையாக இருக்கும் என பலரும் கருதினார்கள்.
தற்போது ‘கூலி’ படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் சந்தீப் கிஷன். இது தொடர்பாக சந்தீப் கிஷன், “‘கூலி’ படத்தில் நடிக்கவில்லை. லோகேஷ் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் இருவரும் பெரிதாக பேசிக் கொள்வதில்லை என்றாலும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம்.
‘கூலி’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்றிருந்தேன். ரஜினி சாரை சந்தித்து நீண்ட நேரம் பேசினேன். அப்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டவுடன் அனைவரும் அப்படத்தில் நடிப்பதாக செய்தி வெளியிட்டு விட்டார்கள். ரஜினி சாரை சந்தித்தது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்” என்று கூறியிருக்கிறார்.