YNOT ஸ்டூடியோஸ் வழங்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, மாதவன், சித்தார்த், மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
YNOT Studio மூலம் ‘தமிழ் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதிச்சுற்று’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்த சசிகாந்த், இப்போது ‘டெஸ்ட்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். பிரபல சிங்கரான சக்தி ஸ்ரீ கோபாலன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் ஏப்ரல் 4-ம் தேதி (இன்று) ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் மாதவன். இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கும் அவர், “ஒருத்தருக்கு ஹீரோவாக இருப்பவர்கள், மற்றவர்களுக்கு வில்லனாக இருப்பார்கள். வில்லனாக இருப்பவர்கள் ஹீரோவாக இருப்பார்கள். இப்படி இந்தப் படத்தில் ஹீரோ யார், வில்லன் யார் என்பதை கதைதான் தீர்மானிக்கிறது. அதுதான் படத்தின் மையக்கதை. மேட்ச் ஃபிக்சிங் பண்ணும் வில்லனாக இதில் நடித்திருக்கேன்.
வில்லன், ஹீரோ என்றெல்லாம் எனக்குக் கணக்கில்லை, நான் ஒரு நடிகன் அவ்வளவுதான். கதை நல்லா இருந்தா எந்தக் கதாபாத்திரத்திலும் நடிப்பேன். நல்லதை மட்டுமே சொல்லி வகுப்பெடுத்து நடிக்க நான் ஒன்றும் குரு கிடையாது, நடிகன் அவ்வளவுதான்.

குழந்தையை அடிக்கிற மாதிரி இந்தப் படத்துல ஒரு சீன் வரும். இப்படத்தில் மனைவியாக நடித்திருக்கும் நயன் தாராவையும் அறைகிற மாதிரி சீன் இருக்கு. முதலில் அதில் நடிக்கமாட்டேனு சொன்னேன். இதுவரை நான் நடித்த படங்களில் பொம்பளைங்கள (பெண்களை) அறைஞ்சது இல்லை. ஆனால், இந்தப் படத்துல அப்படி நடிச்சிருக்கேன். அதற்குக் காரணம் கதைதான். கதைக்குத் தேவைப்பட்டது என்பதால் அப்படி நடித்தேன். நானும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். நடிகரை நடிகராக மட்டும் பாருங்கள்.
நான் வீட்டில் யாரையும் கைநீட்டியது கூட கிடையாது. அப்படி நீட்டினால் என் உயிருக்கே ஆபத்தாகிவிடும் (சிரித்தபடி). பெண்களை அடிப்பது நம் கலாசாரமே கிடையாது. இப்படத்தில் பெண்ணை, குழந்தையை அடிக்கும்போதே என்னுடைய மனசாட்சி என்னைவிட்டுப் போய்விடுவதுபோல் காட்சிகள் இருக்கும். வில்லன் கதாபாத்திரத்திற்கு நல்லது கெட்டது கிடையாது. ” என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.