கும்பம்: தும்பைப்பூ சிரிப்பும், தூய்மையான மனதும் கொண்ட நீங்கள், உண்மையை உறக்கச் சொல்பவர்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்ப்புகளைத் தாண்டி வெல்வீர்கள். வழக்குகள் சாதகமாகும். வற்றிய பணப்பை நிரம்பும். வீட்டுக்குத் தேவையானதை வாங்கிக் குவிப்பீர்கள். அலைபாய்ந்த மனது இனி அமைதியாகும். மனதில் இருந்து வந்த பயம் நீங்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உங்களை கண்டும் காணாமல் போன சொந்தம் பந்தங்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை நீங்கும். தூக்கமின்றி தவித்தவர்களுக்கு இனி ஆழ்ந்த உறக்கம் வரும். எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை உணர்வீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்களெல்லாம் நீங்கி இனி மகிழ்ச்சி பொங்கும். அடிக்கடி இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். சில சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். யாரிடமும் வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரை யும் எடுத்தெறிந்து பேசுவதை தவிர்க்கவும்.
மே 14-ம் தேதி நிகழும் குருப்பெயர்ச்சி நல்லதொரு முன்னேற்றத்தைத் தரும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகும் குணம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உங்களை அலட்சியப்படுத்திய நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதையோ இழந்ததைப் போல் இருந்த உங்கள் முகம் மலரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.
பழைய சொந்த பந்தங்களை வெகுநாட்களுக்குப் பிறகு பார்ப்பீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். காலில் சிறு சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அக்கம் பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த உரசல் போக்கு மாறும். அவர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.
பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். டவுன் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு கிராமத்துக்கு செல்ல முயற்சிப்பீர்கள். அந்தக் காலம் போல் கூட்டுக் குடும்பமாக இருக்க நினைப்பீர்கள். ஏதோ ஒருவித அமைதியை தேடிச் செல்வீர்கள். அதற்கு குரு உபதேசம் துணை புரியும். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்.
இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் மாறும். எப்போதும் அலுத்துக் கொண்ட கணவர் இனி அன்பாகப் பேசுவார். அதேபோல அவ்வப்போது கோபப்படவும் செய்வார். அவற்றை கண்டு கொள்ளாதீர்கள். அவரின் வருமானம் உயரும். இனி பிள்ளைகளுக்காக அதிக நேரம் ஒதுக்குவீர்கள். தடைபட்ட உயர்கல்வியை தொடர்வார்கள். காதல் கைகூடும். மாதவிடாய் கோளாறிலிருந்து விடுபடுவார்கள். மாணவ மாணவிகளுக்கு பெற்றோரின் ஆதரவு பெருகும். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் உண்டு. ஆண்டு இறுதியில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிம்மதி ஏற்படும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தள்ளிப் போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர் கள் பணிந்து வருவார்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். நிலையற்ற சூழல் மாறி, இனி அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். குறை சொல்லிக் கொண்டிருந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாறுவார். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். வருமானம் உயரும். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள்.
கணினி துறையினருக்கு, வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். மூத்த கலைஞர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, முதலில் ஒருவித அழுத்தத்தைக் கொடுத்தாலும் நிறைவில் பெரும் வெற்றியைத் தருவதாக அமையும்.
பரிகாரம்: ஸ்ரீகுருபகவானை கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். ரத்த தானம் செய்யுங்கள். தென்னை மரக் கன்று நட்டு பராமரியுங்கள். எதிலும் சாதிப்பீர்கள்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |