தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை கடந்து, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்.10-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான முதல் 5 நாட்களில் மட்டும் (திங்கள்கிழமை வரை) உலக அளவில் ரூ.171.50 கோடி வசூலை ஈட்டியுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. வெளிநாடுகளில் மட்டும் ரூ.52.15 கோடியை ஈட்டியுள்ளது.
ரூ.170 கோடி வசூலைத் தாண்டியதன் மூலம் 2025-ம் ஆண்டில் இதுவரை ரிலீஸான தமிழ்ப் படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ‘குட் பேட் அக்லி’. முன்னதாக, அஜித்தின் ‘விடாமுயற்சி’ ஒட்டுமொத்தமாக ரூ.136 கோடியை ஈட்டியிருந்தது. அதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ மொத்த வசூலான ரூ.152 கோடியை தற்போது ‘குட் பேட் அக்லி’ வெறும் 5 நாட்களில் எளிதாக தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா அம்சங்களுடன் அவரது பல படங்களின் ரெஃபரன்ஸ்களை உள்ளடக்கிய இந்தப் படம், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரது ரசிகர்களுக்கு நல்ல தீனியாக அமைந்துள்ளது.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வருகிறது ‘குட் பேட் அக்லி’. ‘மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் இந்தப் படம், முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா அம்சங்களுடன் அவரது பல படங்களின் ரெஃபரன்ஸ்களை உள்ளடக்கியதாக உள்ளது. விரைவில் இந்தப் படத்தின் வசூல் ரூ.200 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.