‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘குடும்பஸ்தன்’. சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைத்துள்ளார்.
சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். வரும் 24-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் மணிகண்டன் பேசும்போது, “இயக்குநர் ராஜேஷ் முதலில் அட்வென்ச்சர் கதை ஒன்றை எழுத நினைத்தார். பிறகு இன்றைய தேதியில் குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் என்பதால் அதையே படமாக்கியிருக்கிறார். பார்வையாளர்களுக்கு பல வழியில் இது கனெக்ட் ஆகும். இந்தப் படத்துக்காகக் கொங்கு தமிழ்பேச, ‘நக்கலைட்ஸ்’ டீம் எனக்குப் பயிற்சி கொடுத்தார்கள். என் வாழ்க்கையில் அதிக சண்டை போட்ட நபர்களில் இந்தப் படத்தின் இயக்குநர் ராஜேஷூம் ஒருவர்.
அது, படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகத்தான். அதை அவர் புரிந்து கொண்டார். சினிமாவில் சின்ன பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவையாக இருக்கிறது. நான் செய்த சின்ன வேலைகளுக்கு எல்லாம் பெரிய பாராட்டு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி” என்றார். இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.