சென்னை: நடிகை மேனகா – மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரது மகள் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய அவர், ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ரஜினி முருகன், பைரவா, சர்க்கார், ரெமோ, அண்ணாத்த, ரகு தாத்தா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’) படத்துக்காக தேசிய விருது பெற்றார்.
இதற்கிடையே, இவர் தனது பள்ளி நண்பர் ஆன்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, ஆன்டனி தட்டில் – கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நேற்று காலை 9.40 மணிக்கு நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணத்துக்காக கோவா சென்றிருந்த தவெக தலைவரான நடிகர் விஜய், மணமக்களை வாழ்த்தினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.