ரவி மோகன், நித்யா மேனன், வினய், யோகி பாபு, லால், லட்சுமி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்தத் திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தன்பாலின ஈர்ப்பு, லிவிங் டுகெதர் நவீன காதலை கதைக்களமாக கொண்டு உருவானது இந்தத் திரைப்படம். மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம், வர்த்தக ரீதியில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. எனினும், இந்தப் படம் பேசிய விஷயங்கள் அனைத்தும் கவனிக்க வைத்தன. அண்மையில் ஓடிடியில் வெளியான இப்படம் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.
இந்த நிலையில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி தற்போது ’காந்தி டாக்ஸ்’ என்ற மவுனப் படத்தின் நடித்து முடித்துள்ளார். ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரெய்ன்’ உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதியின் கைவசம் உள்ளன