காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்தியா. மேலும், அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.
தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்திடம், பஹல்காம் தாக்குதல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த், “காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை கெடுக்க வேண்டும் என்று செய்கிறார்கள்.
அதைச் செய்தவர்களுக்கும், அவர்கள் பின்னால் இருப்பவர்களுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்.
இதே மாதிரி மீண்டும் செய்ய வேண்டும் என கனவிலும் அவர்கள் நினைக்கக் கூடாது. மத்திய அரசு கூடிய விரைவில் அதை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.