துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில், நடிகர் அஜித் காயமின்றி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பான வீடியோ பதிவுகளும் வைரலாகி வருகின்றன.
பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எப்போது வெளியீடு என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரு படப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், துபாயில் நடக்கும் 24ஹெச் மற்றும் ஐரோப்பிய 24ஹெச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ் போட்டிகளில் அணி தலைவராகவும் ஓட்டுநராகவும் பங்கேற்கிறார் அஜித். பல வருடங்களுக்கு பின் டிராக்கில் அஜித் மீண்டும் களமிறங்க இருப்பதால் அவர் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் அஜித் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்தப் பயிற்சியின்போதுதான் அவர் ஓட்டிய ரேஸ் கார் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி, அது குறித்த வீடியோ பதிவுகள் வைரல் ஆகி வருகின்றன. அஜித் இயக்கிய ரேஸ் கார் மிக வேகமாக தடுப்புகளில் மோதி, சில முறை சுழன்றபடி நிற்கிறது. காரின் முகப்புப் பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தது தெளிவாகத் தெரிகிறது. நல்வாய்ப்பாக, அஜித் அந்தக் காரில் இருந்து காயம் ஏதுமின்றி இறங்குகிறார். அவரை ஊழியர் ஒருவர் அழைத்துச் செல்கிறார். இதன்மூலம் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதியாகிறது.
Ajith Kumar’s massive crash in practise, but he walks away unscathed.
Another day in the office … that’s racing!#ajithkumarracing #ajithkumar pic.twitter.com/dH5rQb18z0
— Ajithkumar Racing (@Akracingoffl) January 7, 2025