‘ராவணக் கோட்டம்’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் கணேஷ் சரவணன். அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், இப்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் பிரக்யா, ஆயிஷா, புகழ் என பலர் நடிக்கின்றனர்.
மறைந்த நடிகர் ரகுவரனின் தம்பி, ரமேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஜாபர் இயக்குகிறார். சத்யா இசை அமைக்கிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் இப்படத்தை ஆஃப்ரின்ச் புரொடக்ஷ்ன்ஸ் சார்பாக ஆஃப்ரின்ச் தயாரிக்கிறார்.
படம் பற்றி ஜாபர் கூறும்போது, “நான், மிஸ்டர் லோக்கல், மாட்டிக்கிட்டியா பங்கு ஆகிய வெப் தொடர்களையும் தூர்தர்ஷனில் வெளியான, நானே வருவேன் என்ற சீரியலையும் இயக்கி இருக்கிறேன். இப்போது சினிமாவில் அறிமுகமாகிறேன். இது, காதல் பின்னணியில் உருவாகும் காமெடி த்ரில்லர் படம். கல்லூரியில் காதலித்தவர்கள் சூழ்நிலையால் பிரிந்து வெவ்வேறு வாழ்க்கை வாழ்கிறார்கள். ஒரு கட்டத்தில் மீண்டும் பேசிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
மீண்டும் சந்திக்க நினைக்கும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது” என்றார்.