
காதலின் ஏமாற்றம், தைரியமான முடிவுகள், நேர்மையான கோபம் என வாழ்வை இயல்பான கண்ணோட்டத்தோடு அணுகுகிற நவீனக் காலத்துப் பெண்ணாக நித்யா மேனன் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சிங்கிள் மதராக வருகிற இரண்டாம் பாதியில் கதையின் கருவுக்குத் தேவையான நடிப்பை அநாயாசமாக வழங்கி வலுவாக ஸ்கோர் செய்திருக்கிறார். ‘இந்த உலகம் வாழத் தகுதியில்லை’ எனப் பேசி காதலில் தோற்று, மன்மதனாக மாற்றம் அடையும் இடைவெளியை நடிப்பில் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் ரவி மோகன். குறிப்பாக நித்யா மேனனுடன் கதைக்குத் தேவையான கெமிஸ்ட்ரியை அளவாகக் கொடுத்ததோடு, சிறுவன் பார்த்தீவுடன் உறவு பாராட்டும் காட்சிகளில் இயல்பான ஃபீல் குட் உணர்வைக் கொடுத்துள்ளார். பிரிந்துசென்ற காதலி திரும்ப வரும் இடத்தை அவர் தயக்கத்துடன் அணுகியதும் எதார்த்தமானதொரு நடிப்பு! சிறுவன் ரொஹான் சிங், வயதுக்குரிய குறும்புத்தனம், தந்தை இல்லாத வெறுமை, தேவையான அரவணைப்பு கிடைத்தவுடன் ஆனந்தம் எனச் சுட்டி பையனாக நடிப்பில் வெற்றிக்கான கோலினைப் பறக்கவிட்டுள்ளான்.