பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்கவே, சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 6-ம் தேதி முதல் மெஹந்தி, ஹல்தி உள்ளிட்ட சடங்குகள் சென்னையில் நடைபெறுகிறது. இருவரது திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பார்வதி நாயர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்புகைப்படங்களுடன் “ஆஷ்ரித்தை தற்செயலாக ஒரு விருந்தில் சந்தித்தேன். அன்று பேச தொடங்கினோம். ஆனால், உண்மையில் நெருங்கி வர சில மாதங்கள் எடுத்துக் கொண்டது. தற்போது இருவரும் காதலித்து வருகிறோம். பெற்றோர் சம்மதத்துடன் மலையாள மற்றும் தெலுங்கு முறைப்படி திருமணம் நடைபெறும். பிப்ரவரி 6-ம் தேதி ஹல்தி, மெஹந்தி உள்ளிட்ட சடங்குகள் அனைத்தும் சென்னையில் நடைபெறும். கேரளாவில் திருமண வரவேற்பு நடத்த முடிவு செய்திருக்கிறோம்” என்று பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘உத்தம வில்லன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ‘ஆலம்பனா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.