இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த படத்தின் பணிகள் ஹைதராபாத்தில் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது.
‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களுக்கு பிறகு ராஜமவுலி இயக்கவுள்ள அடுத்த படத்துக்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தின் பணிகளை கடந்த சில மாதங்களாக கவனித்து வருகிறார் ராஜமவுலி. முழுக்க காடுகளை பின்புலமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கி இருக்கிறார்.
இதில் நாயகனாக மகேஷ் பாபு, நாயகியாக பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஹைதராபாத்தில் கதை விவரிப்பு, பயிற்சி உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு இடையே கையில் மகேஷ் பாபுவின் பாஸ்போர்ட் உடன் ராஜமவுலி வெளியிட்ட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பதிவுக்கு மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா இருவருமே கமெண்ட் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதியாகிவிட்டது. விரைவில் படக்குழுவினர் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என தெரிகிறது.