ராகவா லாரன்ஸின் “காஞ்சனா 4′ படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்கு பின், ‘பென்ஸ்’, ‘புல்லட்’, `கால பைரவா’ என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதில் அவர் இயக்கி நடித்து வரும் ‘காஞ்சனா’ வின் நான்காம் பாகத்தின் படப்பிடிப்பு மூன்றாவது ஷெட்யூலை நோக்கி முன்னேறியுள்ளது.
முனி டு காஞ்சனா
லாரன்ஸின் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘முனி’. ‘நடுநிசியில் அம்மா துணையுடன் ‘உச்சா’ போகும் பயந்தாங்கொள்ளி பையனாக லாரன்ஸ் வெகுளித்தனமான நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பார். அதில் புது வீட்டில் குடியேறும் லாரன்ஸை ராஜ்கிரணின் ஆவி பிடித்துக்கொள்கிறது. தான் வஞ்சிக்கப்பட்ட கதையை ராஜ்கிரண் சொல்கிறார். அவரின் பழி வாங்கும் சபதத்தை நிறைவேற்ற தன் உடலை ஒரு கருவியாகக் கொடுக்கிறார் லாரன்ஸ். அந்த படத்தின் வெற்றிக்கு பின், மீண்டும் ஒரு பேய் கதையை கையில் எடுத்தார். ‘முனி 2’ ‘காஞ்சனா”வாக மாறுகிறது.
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் ‘பென்ஸ்’ படத்தில் நடிக்க ரெடியானார். சில காரணங்களால் அதன் படப்பிடிப்பு வேகம் எடுக்கவில்லை. இதனால் அதன் தேதிகளை ‘புல்லட் ‘ படத்திற்கு கொடுத்தார் லாரன்ஸ். அவரது தம்பி எல்வின் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். ‘புல்லட்’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு ‘காஞ்சனா 4’ படத்தை ஆரம்பித்தார் லாரன்ஸ்.
”பேய் ட்ரெண்டை உருவாக்கணும்னு நான் எதுவும் பண்ணலை. எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம்னால, பேயை டிரெண்ட் ஆக்கிட்டாங்க. தவிர எங்க டீமோட சின்ஸியரான வொர்க் ஒரு ட்ரெண்டை உருவாக்கிருச்சு.” எனச் சொல்லும் லாரன்ஸின் ‘காஞ்சனா”வில் பூஜா ஹெக்டே ஹீரோயின். இன்னொரு ஹீரோயினாக நோரா பதேஹி நடிக்கிறார். தவிர ‘காஞ்சனா”க்கு பலம் சேர்க்கும் கோவை சரளா, தேவதர்ஷினி, ஶ்ரீமன், ஆனந்த ராஜ், ரெடின் கிங்ஸ்லி என பலரும் இருக்கிறார்கள்.