கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள சாய் ராஜகோபால், 70-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கவுண்டமணி – செந்திலுக்கான நகைச்சுவைப் பகுதிகளை எழுதிய அனுபவம் உடையவர்.
கவுண்டமணியுடன் இணைந்து யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில்
சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக், நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள கதைக்களத்தில், கவுண்டமணியின் அதிரடியான அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. கவுண்டமணியின் காமெடிகளுக்கு ஏற்றாற்போல் யோகிபாபு கவுன்டர்களுடன் சப்போர்ட் செய்கிறார். அக்கால கவுண்டமணி ஸ்டைலில் சில காமெடி வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
‘கரன்ட் கம்பியை முயல் கடிச்சிடுச்சி…’என்ற வசனம், யோகி பாபு தவழ்ந்தபடி சென்று மொட்டை ராஜேந்திரன் காலில் விழுவது போன்ற அரசியல் பகடிகளும் கவனம் ஈர்க்கின்றன. ஆனால், திரைமொழி மிகவும் ‘வீக்’காக இருப்பதை ட்ரெய்லரின் நாடகத்தன்மை காட்டிவிடுகிறது.