சென்னை: போட்டி என்பது இரண்டு பேருக்கு இடையே தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதிலும் இப்போது வளர்ந்து வரக்கூடிய வகையைச் சேர்ந்த நடிகர்கள் அனைவருமே போட்டியாளர்கள் தான் என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கவினுடன் தொழில்ரீதியான போட்டி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஹரிஷ் கல்யாண் பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது: “எப்போதுமே இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி இருக்கும். ரஜினி – கமல் தொடங்கி அப்படித்தான் பார்த்துள்ளோம். இப்போது வரை அந்த போட்டி தொடரத்தான் செய்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை போட்டி என்பது இரண்டு பேருக்கு இடையே தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதிலும் இப்போது வளர்ந்து வரக்கூடிய வகையைச் சேர்ந்த நடிகர்கள் அனைவருமே போட்டியாளர்கள் தான். நாம் வளர்ந்த பிறகு நமது பார்வை மாறலாம்.
நம்முடைய கடைசி படத்தின் சாதனையை முறியடிப்பதுதான் பெரிய சவால் என்று நினைக்கிறேன். கடைசியாக நான் நடித்த படம் மூலம் எனக்கு சில விஷயங்கள் கிடைத்தன. அந்த படத்தை விட இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் சிறப்பாக என்ன செய்யலாம் என்று பார்க்க வேண்டும். அதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அப்படிப் பார்த்தால் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். எல்லாருமே நல்ல படம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” இவ்வாறு ஹரிஷ் கல்யாண் தெரிவித்தார்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், தினேஷ், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிதும் கொண்டாடப்பட்டது.